விதிமுறை மீறல் தொடர்பாக 16 ஆம்னி பஸ்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
பெரம்பலூரில் விதிமுறை மீறல் தொடர்பாக 16 ஆம்னி பஸ்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
பெரம்பலூர், மே.10-
தமிழகத்தில் இன்று(திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு காரணமாக பஸ்கள் ஓடாது என்பதால், நேற்று முன்தினமும், நேற்றும் 24 மணி நேரமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் முழு ஊரடங்கை காரணம் காட்டி தனியார் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்று சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் வழியாக சென்ற ஆம்னி பஸ்களில், பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி பழனிசாமி தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செல்வகுமார் (பெரம்பலூர்), பெரியசாமி (அரியலூர்) ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். அப்போது புதுச்சேரி பதிவெண் கொண்ட ஒரு ஆம்னி பஸ்சுக்கான சாலை வரி கட்டாததால், அந்த பஸ்சுக்கு ரூ.50 ஆயிரம் அபராதமாகவும், 15 ஆம்னி பஸ்களில் விதிமுறைகள் மீறப்பட்டதால் இணக்க கட்டணமாக மொத்தம் ரூ.50 ஆயிரமும் அபராதமாக அதிகாரிகள் விதித்து வசூலித்தனர். மேலும் 10 ஆம்னி பஸ்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story