2-வது நாளாக பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதல்


2-வது நாளாக பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதல்
x
தினத்தந்தி 9 May 2021 8:52 PM GMT (Updated: 9 May 2021 8:52 PM GMT)

இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதன் எதிரொலியாக 2-வது நாளாக நேற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

பெரம்பலூர்:

இன்று முதல் முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் மீண்டும் அதிகரித்த நிலையில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனாவின் 2-வது அலையின் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படவுள்ளது.
இதனால் முழு ஊரடங்கிற்கு முன்னதாக 2 நாட்களுக்கு மட்டும் அனைத்து கடைகளையும் இரவு 9 மணி வரை திறக்கவும், அரசு மற்றும் தனியார் பஸ்களை 24 மணி நேரமும் இயக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.
கடைவீதிகளில் கூட்டம்
இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் போல், 2-வது நாளாக நேற்றும் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. இதனால் பொருட்கள் வாங்க கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. முழு ஊரடங்கு அன்று மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள் தவிர, இதர கடைகள் திறக்கப்படாது என்பதால், பெரம்பலூர் மாவட்டத்தில் கடைவீதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும் பொருட்கள் வாங்க நேற்று பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
மேலும் ரம்ஜான் பண்டிகை நெருங்குவதால் ஜவுளிக்கடை, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. வருகிற 14-ந்தேதி அட்சய திரிதியையை முன்னிட்டு நேற்று நகை கடைகளில் நகைகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
டாஸ்மாக் கடைகளில்...
வழக்கம்போல் நேற்று காலை நேரத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள், மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. டாஸ்மாக் கடைகள் முழு ஊரடங்கில் செயல்படாது என்பதால் மது பிரியர்கள் 14 நாட்களுக்கு தேவையான மது பாட்டில்களை பெட்டி, பெட்டியாகவும், சாக்கு மூட்டையிலும் வாங்கிச்சென்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. இன்று முதல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடாது என்பதால் நேற்று பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

Next Story