ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.16¾ கோடிக்கு மது விற்பனை; டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் குவிந்தனர்


ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.16¾ கோடிக்கு மது விற்பனை; டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 10 May 2021 2:27 AM IST (Updated: 10 May 2021 2:27 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் குவிந்தனர். ஒரே நாளில் ரூ.16¾ கோடிக்கு மது விற்பனையானது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் குவிந்தனர். ஒரே நாளில் ரூ.16¾ கோடிக்கு மது விற்பனையானது.
டாஸ்மாக் கடைகள்
பண்டிகை காலம் என்றாலும் சரி, கடைகளுக்கு தொடர் விடுமுறை என்ற அறிவிப்பு வந்தாலும் சரி முதலில் அதிக கூட்டம் கூடும் இடமாக டாஸ்மாக் கடைகள் உள்ளன. கடந்த ஆண்டில் இருந்து கொரோனா தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பு வரும்போதெல்லாம் காய்கறி கடைகள், மளிகை கடைகளில் கூட்டம் கூடுவதை போல, டாஸ்மாக் கடைகளிலும் அதிக கூட்டம் கூடுகிறது.
தமிழகத்தில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு நேற்று முன்தினம் காலையில் வெளியானது. அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே ஏராளமான டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் குவிந்ததை காணமுடிந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.
3 மடங்கு அதிகம்
மது பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்ற அறிவிப்பு வெளியானது. 2 நாட்கள் அவகாசம் இருந்தாலும், மது பிரியர்கள் பொறுமையிழந்தனர். நேற்று முன்தினமே தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை அள்ளி சென்றார்கள். எனவே அனைத்து கடைகளிலும் மது தட்டுப்பாடு ஏற்படாத வகையில் உடனுக்குடன் மது பாட்டில்கள் குடோன்களில் இருந்து கடைகளுக்கு அனுப்பி வைக்க டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.16 கோடியே 76 லட்சத்து 91 ஆயிரத்து 670-க்கு மது விற்பனையாகி உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சாதாரண நாட்களில் தினமும் ரூ.5 கோடிக்கும், வார இறுதி நாட்களில் சற்று அதிகமாகவும் மது விற்பனையாகும். ஆனால் நேற்று முன்தினம் விற்பனையானது, வழக்கத்தைவிட 3 மடங்கு அதிகமாகும்.
அலைமோதிய கூட்டம்
இதேபோல் நேற்றும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியதை காணமுடிந்தது. மதிய நேரத்தில் மட்டும் வெயில் அதிகமாக காணப்பட்டதால், பல கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. காலை மற்றும் மாலை நேரங்களில் மது பிரியர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஈரோடு திருநகர் காலனியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு வரிசையாக சென்று மது வாங்குவதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தாலும், மது பிரியர்கள் ஆர்வத்தின் மிகுதியால் முண்டியடுத்து சென்று மதுவை வாங்கி சென்றார்கள். இதனால் அங்கு சமூக இடைவெளி என்பது காற்றில் பறந்தது. ஈரோடு ரெயில் நிலையம் முன்பு உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவை வாங்கி சென்றார்கள். இதன் காரணமாக நேற்றும் மது விற்பனை அமோகமாக காணப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

Next Story