வங்கி கடன் தவணை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும்


வங்கி கடன் தவணை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 10 May 2021 3:00 AM IST (Updated: 10 May 2021 3:00 AM IST)
t-max-icont-min-icon

வங்கி கடன் தவணை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய நிதியமைச்சகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர், 
வங்கி கடன் தவணை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய நிதியமைச்சகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
பெரும் பாதிப்பு
இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம், மத்திய நிதி அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
 கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் ஏற்பட்ட போது மத்திய, மாநிலஅரசுகள் ஊரடங்கு அறிவித்த நிலையில் தொழில் நிறுவனங்கள், வணிக வட்டாரத்தினர், ஏழை, எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரும் பெரும் பாதிப்புக்குள்ளாயினர். தொடர்ந்து மத்திய நிதியமைச்சகம் தொழில் நிறுவனங்கள், வணிக வட்டாரத்தினர் மற்றும் அனைத்து தரப்பினரும் வங்கிகளில் பெற்றிருந்த வீட்டுக்கடன், வணிகக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் தவணைத்தொகை கட்டுவதற்கு கால அவகாசம் வழங்கியது.
கால அவகாசம் 
 வட்டித்தொகை கட்டுவதிலும் சலுகை வழங்கியது. இந்நிலையில் தற்போது கொரோனா 2-வது அலை தாக்கம் அதைவிட பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் கொரோனா பல்வேறு வகையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 தற்போது தமிழக அரசு இரு வார ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்நிலையில் தொழில் துறையினருக்கும், வணிக வட்டாரத்தினருக்கும், ஏழை,எளிய மக்கள் நடுத்தர வர்க்கத்திற்கும் அவர்கள் பெற்றுள்ள வங்கி கடன் தொகை கட்டுவதற்கு காலஅவகாசம் வழங்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
அவசியம் 
 அனைவரும் வங்கிகளில் பெற்றுள்ள வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் தொகை கட்டுவதற்கு பெரிதும் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
 எனவே அவர்களுக்கு உரிய சலுகை வழங்க வேண்டியது மிகவும் அவசியமாகும். எனவே மத்திய நிதி அமைச்சகம் இதுகுறித்து ஆய்வு செய்து ரிசர்வ் வங்கி மூலம் அனைத்து வங்கி நிர்வாகமும், நிதிநிறுவனங்களும் கடந்த ஆண்டு வழங்கியதை போல வங்கி கடன் தவணை கட்டுவதற்கு காலஅவகாசம் வழங்க வேண்டும். மேலும் வட்டித்தொகையிலும் சலுகை வழங்க வேண்டும். காலம் தாழ்த்தாது இதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டியது அவசியமாகும்.
 இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

Next Story