இன்று முதல் முழு ஊரடங்கு: சேலத்தில் டாஸ்மாக் கடைகளில் 2-வது நாளாக குவிந்த மதுப்பிரியர்கள் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்
சேலத்தில் டாஸ்மாக் கடைகளில் 2-வது நாளாக குவிந்த மதுப்பிரியர்கள்
சேலம்:
இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் சேலத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று 2-வது நாளாக மதுப்பிரியர்கள் குவிந்தனர். அப்போது அவர்கள் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி சென்றனர்.
மதுப்பிரியர்கள் குவிந்தனர்
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று (திங்கட்கிழமை) முதல் 24-ந்தேதி வரை 15 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. முழு ஊரடங்கின்போது ‘டாஸ்மாக்’ கடைகளுக்கு அனுமதி இல்லை.
இந்தநிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ‘டாஸ்மாக்’ கடைகளில் நேற்று முன்தினம் மதுப்பிரியர்கள் ஆர்வத்துடன் குவிந்தனர். காலை 8 மணிக்கு கடைகள் திறக்கப்பட்ட உடன் ஒரு மணி நேரத்தில் முழு ஊரடங்கு அறிவிப்பு வெளியானதால் டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது. பின்னர் அவர்கள் அதிகளவில் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.22 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
2-வது நாளாக களை கட்டியது
நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள 220 டாஸ்மாக் கடைகளில் விற்பனை தொடங்கியது. அப்போது முன்கூட்டியே வந்து காத்திருந்த மதுப்பிரியர்கள் சாக்கு, பை உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்து மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். சேலம் மாநகரில் முள்ளுவாடி கேட், டவுன் ரெயில் நிலையம் அருகில், சத்திரம், புதிய பஸ்நிலையம் எதிரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
நேற்று முன்தினமே டாஸ்மாக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் விற்பனை ஆகி விட்டதால் நேற்று குறிப்பிட்ட சில வகையான மதுபானங்கள் மட்டுமே இருந்தது. ஆனாலும் மாலை 6 மணி வரை செயல்பட்ட டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்து தேவையான மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை நேற்று 2-வது நாளாக களைகட்டியது.
நீண்ட வரிசை
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் என்பதால் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அந்த வெயிலையும் பொருட்படுத்தாமல் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச்சென்றனர்.
சிலர் வெயிலை சமாளிக்க குடைபிடித்தபடியும், ஒரு சிலர் துணிகளை முக்காடுபோல் தலையில் போர்த்தியபடியும் வரிசையில் நின்றதை காண முடிந்தது.
Related Tags :
Next Story