சேலம் வ.உ.சி. மார்க்கெட் மூடப்பட்டதால் பூக்களை விற்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு
பூக்களை விற்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு
சேலம்:
சேலம் வ.உ.சி. மார்க்கெட் மூடப்பட்டதால் பூக்களை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
பூ மார்க்கெட் மூடல்
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சன்னமல்லி, குண்டுமல்லி, சாமந்தி, சம்பங்கி உள்ளிட்ட பலவகையான பூக்களை விவசாயிகள் கொண்டு வருவார்கள். தினமும் 30 டன்னுக்கு மேல் இங்கு பூக்களை கொண்டு வருவது வழக்கம். பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களிலும், கோவில் திருவிழாகளின் போதும் பூக்கள் விற்பனை அமோகமாக இருக்கும். மேலும் சன்னமல்லி, குண்டுமல்லி, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களின் விலை ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனையாகும்.
இந்தநிலையில் சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் சில பூ வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து பூ மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது.
விவசாயிகள் தவிப்பு
இதையடுத்து பூ மார்க்கெட்டுக்கு விவசாயிகள் பூக்களை கொண்டு வந்து விற்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதேபோல் பூ வியாபாரிகளும் வருமானமின்றி தவிக்கின்றனர். மேலும் தினமும் பறிக்கும் பூக்களை என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
வ.உ.சி. பூ மார்க்கெட் மூடப்பட்டது தெரியாமல் பல விவசாயிகள் பூக்களை கொண்டு வருகின்றனர். இதற்கிடையே எப்போதும் அதிக விலைக்கு விற்பனையாகும் சன்னமல்லி, குண்டுமல்லி, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்கள் விலை தற்போது கிலோ ரூ.100-க்கும் குறைவாக விற்பனையாகிறது.
Related Tags :
Next Story