இன்று முதல் முழு ஊரடங்கு: சேலத்தில் 2-வது நாளாக காய்கறி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம் வெளியூர் செல்ல பஸ் நிலையத்தில் பயணிகள் குவிந்தனர்
சேலத்தில் 2-வது நாளாக காய்கறி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
சேலம்:
ஊரடங்கையொட்டி சேலத்தில் 2-வது நாளாக காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் வெளியூர் செல்ல பஸ் நிலையத்தில் பயணிகள் குவிந்தனர்.
முழு ஊரடங்கு
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருப்பினும் வைரஸ் தாக்கம் குறையவில்லை. இதனால் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதையொட்டி நேற்று முன்தினம் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டு, இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடைகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. இதனிடையே தொடர்ந்து 2 வாரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் ஏற்கனவே அமலில் இருந்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு நேற்று ஒரு நாள் தளர்த்தப்பட்டது.
2-வது நாளாக கூட்டம்
இதையொட்டி நேற்று சேலம் மாநகர் பகுதியில் உள்ள காய்கறி உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் 2-வது நாளாக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அதன்படி சூரமங்கலம், அம்மாபேட்டை, தாதகாப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள உழவர்சந்தைகளுக்கு பொதுமக்கள் ஏராளமானோர் வந்து காய்கறிகளை வாங்கிச்சென்றனர்.
இதே போன்று செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர காய்கறி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. செவ்வாய்பேட்டையில் பருப்பு, எண்ணெய், வத்தல் உள்ளிட்ட மளிகை பொருட்களை வாங்கி சென்றனர். அதே போன்று சேலம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள இறைச்சி, மீன் மார்க்கெட்டில் அதிகம் பொதுமக்கள் வந்து இறைச்சி, மீன்களை வாங்கிச்சென்றனர்.
சூரமங்கலம் மீன் மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பல இடங்களில் பொதுமக்கள் பலர் முககவசம் இன்றி வந்்ததை காணமுடிந்தது. அதே போன்று சமூக இடைவெளியையும் பலர் கடைபிடிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பயணிகள் குவிந்தனர்
முழு ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கும், வெளியூர் செல்லுவதற்காகவும் பொதுமக்கள் சேலம் புதிய பஸ் நிலையத்தில் குவிந்தனர். அதே போல பஸ்களும் வழக்கத்தை விட அதிகம் இயக்கப்பட்டன.
இது குறித்து அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் மோகன் கூறும் போது, முழு ஊரடங்கையொட்டி வெளியூரை சேர்ந்தவர்கள் அவரவர் சொந்த ஊருக்கு செல்ல அதிகம் பஸ்கள் இயக்கப்பட்டன. வழக்கமாக 840 பஸ்கள் இயக்கப்பட்டு வரப்படுகிறது. நேற்று 200 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன. குறிப்பாக திருவண்ணாமலையில் இருந்து ஏராளமானவர்கள் திருப்பூரில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் சேலம் வந்து திருவண்ணாமலை செல்வதற்காக அதிகம் பஸ்கள் இயக்கப்பட்டன. அதே போன்று சேலத்தில் இருந்து சிதம்பரம், ஓசூருக்கு அதிக பஸ்கள் இயக்கப்பட்டன என்றார். மேலும் சேலம் பழைய பஸ் நிலையத்தில் இரவு 8.30 மணி வரை பஸ்கள் இயக்கப்பட்டன.
Related Tags :
Next Story