முழு ஊரடங்கையொட்டி சென்னையில் 200 இடங்களில் வாகன சோதனை 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு


முழு ஊரடங்கையொட்டி சென்னையில் 200 இடங்களில் வாகன சோதனை 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு
x
தினத்தந்தி 10 May 2021 10:36 AM IST (Updated: 10 May 2021 10:36 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கையொட்டி சென்னையில் 200 இடங்களில் போலீசார் வாகன சோதனை மேற்கொள்ள உள்ளனர். 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

சென்னை, 

கொரோனா 2-வது அலையின் வீரியத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று(திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந்தேதி வரையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

முழு ஊரடங்கில் மளிகை, காய்கறிகள் போன்ற அத்தியாவசிய கடைகள் மதியம் 12 மணி வரை இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பால், பத்திரிகை வினியோகம், மருத்துவம், பத்திரிகை-ஊடக பணிகள் உள்பட அத்தியாவசிய பணிகளுக்கு முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே முழு ஊரடங்கில் அனுமதிக்கப்பட்ட நபர்களை தவிர வேறு யாரும் வெளியே வரக்கூடாது என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

200 இடங்களில் வாகன சோதனை

தமிழகத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் பணியில் 1 லட்சம் போலீசார் ஈடுபட உள்ளனர். சென்னையில் 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தேவையில்லாமல் சாலைகளில் சுற்றுவோர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சென்னையில் 200 இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட உள்ளனர். வீட்டின் அருகே உள்ள மளிகை, காய்கறி கடைகளிலேயே பொதுமக்கள் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்றும், இதற்காக மோட்டார் சைக்கிளில் பிற இடங்களில் செல்லக்கூடாது என்றும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

எச்சரிக்கை

ஊரடங்கு கட்டுப்பாட்டில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள நபர்கள் வெளியே வருகையில் அடையாள அட்டையை கண்டிப்பாக கையில் வைத்திருக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் ஊர் சுற்றினால் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story