ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிதிலமடைந்த கோவிலை புனரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிதிலமடைந்த கோவிலை புனரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 10 May 2021 11:50 AM IST (Updated: 10 May 2021 11:50 AM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பர்வதீஸ்வரர் கோவிலை புனரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்னேரி, 

பொன்னேரி அருகே மெதூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ காமாட்சி சமேத பர்வதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் சோழ மன்னரான ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோவில் யானையின் பிட்டம் எனப்படும் கஜபிருஷ்டம் என்ற அமைப்புடன் சுண்ணாம்பு கலவையுடன் சுட்ட செங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது.

சோழர்கள் கட்டிட கலையை உணர்த்தும் வகையில் பர்வதீஸ்வரர் சந்நிதியின் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், காமாட்சியம்மன், முருகன், விநாயகர், ஏழுமலையான் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.

இக்கோவிலை விஜயநகர அரசர், காகதீய அரசர், குலோத்துங்க சோழன், கிருஷ்ணதேவராயர், சுந்தரபாண்டியன் போன்ற அரசர்களால் திருப்பணிகள் செய்ததாக கூறப்படுகிறது.

பக்தர்கள் கோரிக்கை

தற்போது சிதிலமடைந்து காணப்படும் இக்கோவிலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொல்பொருள் ஆய்வுத் துறையினர் ஆய்வு செய்து புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரை செய்தனர். இது குறித்து தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கை விடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

ஆகவே தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், பழமை வாய்ந்த கோவில்கள் புனரமைக்கும் திட்டத்தின் மூலம் பழமையான பார்வதீஸ்வரர் கோவிலை புனரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story