ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி வாலிபர் கைது
திருவேற்காடு அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லி,
திருவேற்காடு அடுத்த கோலடி மெயின் ரோட்டில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு நேற்று அதிகாலையில் ஒருவர் பணம் எடுக்க சென்றார். அப்போது ஏ.டி.எம். மையத்தின் ஷட்டர் கதவு பாதி அளவுக்கு அடைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் ஏ.டி.எம். மையத்தின் உள்ளே இருந்து சத்தம் வந்தது. சந்தேகம் அடைந்த அந்த நபர், ஷட்டர் கதவை திறந்து உள்ளே பார்த்தார். அங்கு வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வாலிபர் கைது
இதுகுறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருவேற்காடு போலீசார், ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை கையும், களவுமாக பிடித்து கைது செய்து விசாரித்தனர்.
அதில் அவர், திருவேற்காடு செல்லியம்மன் நகரைச் சேர்ந்த ஜோசப் (வயது 22) என்பது தெரிந்தது. அவரது பெற்றோர் வெளியூரில் உள்ளனர். இவர் மட்டும் இங்கு தனியாக தங்கி டிரைவராக வேலை செய்து வந்ததும் தெரிந்தது.
செலவுக்கு பணம் இல்லாததால்...
ஊரடங்கு காரணமாக சரியான வேலை இல்லாத காரணத்தால் செலவுக்கு பணம் இல்லாமல் தவித்ததால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார்.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோசப், குடிபோதையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றாரா? அல்லது உண்மையிலேயே பணத்தேவைக்காக கொள்ளை முயற்சியில் ஈடுபட்டாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
கொள்ளை முயற்சி உடனடியாக தடுக்கப்பட்டதால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணம் தப்பியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story