ஆவடியில் போலீஸ்காரரின் மனைவி தற்கொலை
ஆவடியை அடுத்த வீராபுரம் புதிய கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் கண்ணபிரசாத்.
ஆவடியை அடுத்த வீராபுரம் புதிய கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் கண்ணபிரசாத் (வயது 27). இவர், ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 5-ம் பட்டாலியனில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அனுஷ்யா (23). எம்.எஸ்சி பட்டதாரி. இவர்களுக்கு நேகன் (5) என்ற மகனும், விபூஷா என்ற 10 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அனுஷ்யா, அதே பகுதியில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் கண்ணபிரசாத், மனைவியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை இறைச்சி வாங்க கடைக்கு சென்றிருந்த கண்ணபிரசாத், வீட்டுக்கு திரும்பி வந்தபோது, தனது மனைவி அனுஷ்யா, வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுஷ்யாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
அனுஷ்யாவுக்கு திருமணமாகி 5½ ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.