ஊரடங்கு விதிகளை பின்பற்றாதவர்கள் மீது வழக்கு; செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
ஊரடங்கு விதிகளை பின்பற்றாமல் இரு சக்கர வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் கூறினார்.
முழு ஊரடங்கு
நாடு முழுவதும் கொரோனா தொற்று தாக்குதல் அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் படிப்படியாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால் தமிழக அரசு இன்று (திங்கட்கிழமை) முதல் இந்த மாதம் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.
இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் நிருபர்களிடம் கூறியதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த மாவட்டத்தில் இன்று(திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந்தேதி வரை ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும்.
வழக்குப்பதிவு செய்யப்படும்இந்த மாவட்டத்தில் தேவையில்லாமல் இரு சக்கர வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் வாகன சோதனை சாவடி மையங்களில் போலீஸ் துறை சார்பில் தீவிர வாகன தணிக்கை செய்யப்படும்.
அப்போது பால் வாகனம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் மட்டுமே போக்குவரத்து அனுமதிக்கப்படும். அதேபோல் இ.பாஸ் பெற்ற வாகனங்கள் மட்டுமே திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதிக்கப்படும்.
அதேபோல் முக்கிய சுற்றுலா மையங்களான மாமல்லபுரம், கோவளம் போன்ற கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் திரளாத வண்ணம் அங்கு போலீசார் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்த கொரோனா தொற்றை பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே முற்றிலும் ஒழிக்க முடியும். அதற்கு ஒரே தீர்வு சமூக விலகல் மட்டுமே. எனவே பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்று போலீஸ் துறை சார்பில் கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.