தூத்துக்குடியில் டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு
தூத்துக்குடியில் டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கை முன்னிட்டு காலையில் சாலைகளில் சிறிது வாகன போக்குவரத்து காணப்பட்டது. பகல் 12 மணிக்கு மேல் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின. தூத்துக்குடி, திருச்செந்தூரில் டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஊரடங்கு
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் ஏராளமானவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி நேற்று முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகள் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. பொது போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
வெறிச்சோடின
இதைத் தொடர்ந்து நேற்று காலை முதல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் முழுமையாக நிறுத்தப்பட்டன. வாடகை வேன்கள், கார்கள், ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பெரிய கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன. அதே நேரத்தில் பொதுமக்கள் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக அதிக அளவில் வாகனங்களில் சென்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
தூத்துக்குடியில் காய்கறி மார்க்கெட்டில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், தற்காலிக பஸ்நிலைய வளாகத்தில் காய்கறி கடைகள் அமைக்கப்பட்டன. இதனால் மக்கள் நெரிசல் இன்றி காய்கறிகளை வாங்கி சென்றனர். மாவட்டத்தில் அத்தியாவசிய தொழில் நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கின. அதில் பணியாற்றும் ஊழியர்கள் வழக்கம் போல் பணிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
கண்காணிப்பு
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கை கண்காணிக்கும் பணியில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் கடைகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா? என்று கண்காணித்தனர். தூத்துக்குடியில் காய்கறி மார்க்கெட்டுக்கு செல்லும் பாதைகளில் வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்புகள் அமைத்தனர். மார்க்கெட்டுக்கு செல்பவர்கள் சமூக இடைவெளி விட்டு நடந்து சென்று பொருட்களை வாங்கி சென்றனர்.
மேலும் பொதுமக்கள் கூட்டம் சேராமல் தடுக்கும் வகையில் பறக்கும் கேமிரா (டிரோன்) மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆட்டோக்களில் தெருத் தெருவாக போலீசார் ரோந்து சென்று ஒலி பெருக்கி மூலம் மக்கள் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தேவை இல்லாமல் வெளியில் சுற்ற வேண்டாம் என்று அறிவிப்புகளை செய்து கொண்டே இருந்தனர். இந்த பணிகளை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
திருச்செந்தூர்
முழு ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து திருச்செந்தூர் பகுதியில் 12 மணி வரை மளிகை கடைகள், காய்கறி கடைகள் நேற்று திறந்து இருந்தன. பொது மக்களின் கூட்டம் மிக குறைவாக இருந்தது. பகல் 12 மணிக்கு மேல் திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், போக்குவரத்து பிரவு சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர். அப்போது இரும்பு ஆர்ச், பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ட்ரோன் கேமிராவை இயக்கி போலீசார் கண்காணித்தனர்.
பகல் 12 மணிக்கு மேல் திருச்செந்தூர் வடக்கு ரதவீதி, காமராஜர் சாலை, கோவில் பகுதி, பஸ்நிலையம் உள்ளிட்ட ஆட்கள் அதிகம் நடமாடும் இடங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பஸ் ஸ்டாண்ட்டில் ஆதரவற்றவர்களுக்கு உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் மதிய உணவு வழங்கினார்.
எட்டயபுரம்
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் எட்டயபுரம்பகுதியில் உள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பொது போக்குவரத்து நடைபெறவில்லை. அரசு ஊழியர்களுக்காக இயக்கப்பட்ட அரசு பஸ்கள் மட்டும் காலையில் இயங்கின. அதன் பின்னர் பஸ் நிலையம் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், பகல் 12 மணிவரை காய்கறி, மளிகை கடைகள் திறந்து விற்பனை நடந்தன. இறுதி சடங்குகளில் கலந்து கொள்வோர் செல்லும் வாகனங்களை போலீசார் அனுமதித்தனர். நண்பகல் 12 மணிக்கு மளிகை, காய்கறிகள் அடைக்கப்பட்டதால், அதன் பின்னர் சாலைகள் வெறிச்சோடின. மருந்து கடைகள், பால் பூத்களை தவிர இதர கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. ஆங்காங்கே எட்டயபுரம் போலீசார் பேரிகார்டு அமைத்து, நண்பகல் 12 மணிக்கு மேல் மோட்டார் சைக்கிள்களில் வருவோரை நிறுத்தி விசாரித்து அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story