2 பேர் பலி


2 பேர் பலி
x
தினத்தந்தி 10 May 2021 9:04 PM IST (Updated: 10 May 2021 9:04 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஊத்துக்குளி
திருப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில்  2 பேர் பலியானார்கள். நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
பிரிண்டிங் நிறுவன ஊழியர்கள்
தேனி மாவட்டம் பி.கே.வி.பள்ளி வீதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் கருப்புசாமி வயது 30. அதே போல் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த பிரனேஷ் என்பவரது மகன் அஜய்  21 மற்றும் திருப்பூர் மண்ணரை ரேவதி தியேட்டர் பகுதியை சேர்ந்த சசிக்குமார் என்பவரது மகன் ராஜேஷ்24.  நண்பர்களான இவர்கள் 3 பேரும் திருப்பூர் பாரப்பாளையம் பகுதியில் செயல்படும் தனியாருக்கு சொந்தமான பிரிண்டிங் நிறுவனத்தில் தங்கி  வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் ஊத்துக்குளி அருகே வெள்ளியம்பாளையம் பகுதியில் குடியிருந்து வரும் கருப்புசாமியின் அக்காள் மகன் பரத் என்பவரது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள கருப்புசாமி முடிவு செய்தார். அதன்படி கருப்புசாமி தனது நண்பர்கள் அஜய் மற்றும் ராஜேஷ் ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு வெள்ளியம்பாளையம் வந்தார்.
பின்னர் வெள்ளியம்பாளையத்தில் தனது அக்காள் மகன் பிறந்த நாள் விழாவை கொண்டாடிவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் 3 பேரும் பாரப்பாளையம் நோக்கி சென்றனர். இவர்களுடைய மோட்டார் சைக்கிள் எஸ்.பெரியபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. 
2 பேர் பலி
அப்போது எதிரே சரக்கு வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது.  அந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக கருப்புசாமி உள்பட 3 பேர் வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.இந்த விபத்தில்  மோட்டார் சைக்கிளில் சென்ற  3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்கள் 3 பேரையும்  மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி கருப்புசாமி, அஜய் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 
ராஜேஷ் பலத்த காயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த ஊத்துக்குளி போலீசார் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற  சரக்கு வாகனத்தை தேடி வருகின்றனர்.

Next Story