முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின
உடுமலையில் முழு ஊரடங்கையொட்டி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. வாகன போக்குவரத்து உள்ளதா? என்று வீடியோ கேமராவுடன் கூடிய குட்டி விமானம் மூலம் போலீசார் கண்காணித்தனர்.
உடுமலை
உடுமலையில் முழு ஊரடங்கையொட்டி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. வாகன போக்குவரத்து உள்ளதா? என்று வீடியோ கேமராவுடன் கூடிய குட்டி விமானம் மூலம் போலீசார் கண்காணித்தனர்.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் தாக்குதலின் 2வது அலையின் வேகம் அதிகரித்துள்ளதைத்தொடர்ந்து தமிழக அரசு நேற்று முதல் முழு ஊரடங்கை அமல்படுத்த தொடங்கியுள்ளது. இந்த முழு ஊரடங்கு வருகிற 24ந் தேதிவரை அமலில் இருக்கும். இதில் அரசு சில தளர்வுகளையும் அமல்படுத்தியுள்ளது.
அதன்படி மளிகை கடைகள், காய்கறி கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் ஆகியவை மதியம் 12 மணி வரை திறந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று மதியம் 12 மணிவரை மளிகைக்கடைகள், காய்கறிகடைகள், ஆட்டிறைச்சி கடைகள் கோழி கடைகள் மீன் கடைகள் ஆகியவை திறந்திருந்தன. ஜவுளிகடைகள், நகைக் கடைகள் வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை கடைகள் உள்ளிட்ட கடைகள்அடைக்கப்பட்டிருந்தன. கொழுமம் சாலை உள்பட புறநகர் பகுதியில் பெரும்பாலான இறைச்சிக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மருந்து கடைகள் மற்றும் பால் கடைகள் வழக்கம்போல் திறந்திருந்தன.
வாரச்சந்தை
உடுமலை கபூர்கான் வீதியில் உள்ள உழவர்சந்தை வழக்கம்போல் அதிகாலை முதல் காலை 11 மணி வரை செயல்பட்டது. உடுமலை ராஜேந்திரா சாலையில் உள்ள நகராட்சி வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் கூடுவது வழக்கம். அதேபோன்று நேற்றும் கூடியது. ஆனால் காய்கறிகடைகளை வைப்பதற்கு மிகவும் குறைந்த அளவு வியாபாரிகளே வந்திருந்தனர்.
மதியம் 12 மணிக்குள் வியாபாரத்தை முடித்துக்கொண்டு, மீதமுள்ள காய்கறிகளை எடுத்துக்கொண்டு செல்வது சிரமம் என்பதால் பலர் கடைபோடவில்லை. வாரச்சந்தையில் காய்கறிகள் வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டமும் இல்லை. இந்த வாரச்சந்தை வளாகத்தில் உள்ள தினசரி சந்தை மதியம்12மணிவரை திறந்திருந்தது. ஆனால் காய்கறிகளை வாங்குவதற்கு கூட்டமில்லை.
இந்த வாரச்சந்தையின் ஒரு பகுதியில் உள்ள காய்கறி கமிஷன் மண்டிகளுக்கு விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளையும் காய்கறிகளை கொண்டு வருவார்கள். இந்த காய்கறிகள் கமிஷன் மண்டி உரிமையாளர்கள் மூலம் ஏலத்தில் விடப்படும். இந்த காய்கறிகளை வியாபாரிகள் போட்டிபோட்டு ஏலத்தில் கேட்டு வாங்கிச்செல்வார்கள். ஆனால் 12 மணிக்குள் கமிஷன் மண்டிகளை அடைக்க வேண்டும் என்ற நிலையில் நேற்று விவசாயிகள் மிகவும் குறைந்த அளவு காய்கறிகளையே கொண்டு வந்திருந்தனர். அத்துடன் ஏலத்தில் எடுத்து வாங்கி செல்வதற்கும் வியாபாரிகள் குறைந்த அளவே வந்திருந்தனர்.
போலீசார் கண்காணிப்பு
அரசால் அனுமதிக்கப்பட்டிருந்த மளிகை கடைகள், காய்கறி கடைகள், இறைச்சிக்கடைகள் மதியம் 12 மணிக்கு அடைக்கப்பட்டு விட்டநிலையில், சாலைகளில் சிறிது நேரம் மட்டும் சில கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் மட்டும் ஓடிக்கொண்டிருந்தன. அந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அறிவுரை வழங்கினர். அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், வாடகை கார்கள் வேன்கள் ஆட்டோக்கள் ஆகியவை ஓடாததால் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. மத்திய பஸ்நிலையமும் வெறிச்சோடி காணப்பட்டது.
உடுமலையில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் மேற்பார்வையில், உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்இன்ஸ்பெக்டர்கள் ரவி, ஆனந்தகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா, சாலைகளில் வாகன போக்குவரத்து உள்ளதா? என்று வீடியோ கேமராவுடன் கூடிய குட்டி விமானம் மூலம் போலீசார் கண்காணித்தனர்.
குடிமங்கலம்
பெதப்பம்பட்டியில் முழு ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய தேவைகள் இன்றி பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில் நேற்று ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் இயங்கி வந்த கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
Related Tags :
Next Story