பெருகி வரும் முயல்கள்


பெருகி வரும் முயல்கள்
x
தினத்தந்தி 10 May 2021 9:23 PM IST (Updated: 10 May 2021 9:23 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் பகுதியில் முயல்கள் பெருகி வருகிறது. அவை பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

காங்கயம்
காங்கேயம் பகுதியில் முயல்கள் பெருகி வருகிறது. அவை பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
முயல்
வனப்பகுதிகள், மேய்ச்சல் நிலங்களில் முயல், கீரி, உடும்பு உள்ளிட்ட விலங்குகள் அதிகளவில் வாழும். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை மேய்ச்சல் நிலங்கள் அதிகளவில் இருந்தன. அதில் செம்மறியாடுகள், மாடுகள் மேய்வதற்காக மானாவாரி பயிர்களான கொள்ளு, நரிப்பயறு உள்ளிட்ட பயறு வகைகளை விதைத்து சொந்தப் பயன்பாட்டுக்கு அறுவடை செய்தது போக மீதமுள்ளவற்றை ஆடு, மாடுகளை மேயவிடுவது வழக்கம். அது போன்ற மேய்ச்சல் நிலங்களில் பாம்புகள், உடும்பு, கீரி, முயல் உள்ளிட்ட விலங்குகள் ஏராளமாக காணப்படும். இதில் பாம்புகளை கணிசமான அளவில் கீரிகள் வேட்டையாடிவிடும். கீரி, முயல், உடும்பு உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வேட்டையாடி உணவுக்காக பயன்படுத்துவர். இதனால் முயல், கீரி உள்ளிட்ட விலங்குகளின் பெருக்கம் என்பது கட்டுக்குள் இருந்தது.
காலப்போக்கில் காடுகள் அழிக்கப்பட்டு விவசாய நிலங்களாகவும், தொழில் கூடங்களாகவும் மாறத் தொடங்கியதும் வன விலங்குகளின் வாழ்விடங்களும் குறையத் தொடங்கின. அதே நேரத்தில் வனவிலங்குகள் வேட்டையாடுதல் தடையை அதிகாரிகள் உறுதியாக நடைமுறைப்படுத்தத் தொடங்கியதால் வேட்டையாடுதல் என்பது குறைந்து போனது. இதனால் முயல்கள், கீரிகள், உடும்புகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பெருக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக காங்கேயம் பகுதி கிராமங்களில் முயல்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் அபரிமிதமாக அதிகரித்து வருகிறது. காடுகள் அழிக்கப்பட்ட நிலையிலும் பயிர் செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்களில் முயல்கள் குட்டிபோட்டு தங்கள் எண்ணிக்கையை வேகமாக அதிகரித்து வருகிறது.
புதர்கள்
குறிப்பாக முயல்கள் பசுந்தீவனத்தைதான் அதிகமாக விரும்பி உண்ணும் என்பதால் கொழுக்கட்டை புற்கள் வளர்ந்து நிற்கும் காடுகள், ஆடு, மாடுகளுக்காக பயிரிட்டுள்ள நிலங்கள், வெங்காயம், மிளகாய், சோளம் உள்ளிட்ட பயிர்கள் செய்யப்பட்ட நிலங்களில் இரவு நேரத்தில் மேய்ந்துவிட்டு பகல் நேரங்களில் சிறிய புதர்களுக்குள் சென்று ஓய்வெடுத்து வருகிறது.
இதுபற்றி விவசாயிகள் தரப்பில் கூறும்போதுதற்காலத்தில் முயல்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. வேட்டையாடுதல் தடை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால் அதிகளவில் யாரும் வேட்டையாடுவது இல்லை. அதிகரித்து வரும் முயல் கூட்டம் இரவு நேரங்களில் விவசாய பயிர்களையும் கடித்து சேதப்படுத்துகிறது. தொடர்ந்து முயல்களின் பெருக்கம் அதிகரித்தால் அது விவசாயிகளுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்றனர். 

Next Story