பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை


பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை
x
தினத்தந்தி 10 May 2021 9:32 PM IST (Updated: 10 May 2021 9:32 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. பகல் 12 மணி வரை மளிகை, காய்கறி கடைகள், டீக்கடைகள் செயல்பட்டன. மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. பகல் 12 மணி வரை மளிகை, காய்கறி கடைகள், டீக்கடைகள் செயல்பட்டன. மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
 ஊரடங்கு அமல்
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நேற்று முதல் வருகிற 24ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டம் முழுவதும் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
திருப்பூரில் பெரிய கடைகள், வணிக வளாகங்கள், அதில் இயங்கும் கடைகளுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தனியாக செயல்படும் மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் மதியம் 12 மணி வரை இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஒரே சமயத்தில் 50 சதவீதம் வாடிக்கையாளர் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி திருப்பூரில் பலசரக்கு, காய்கறி, இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் மதியம் 12 வரை மட்டுமே செயல்பட்டன.
ஓட்டல்கள்
அதுபோல் உணவுகளை டெலிவரி செய்யும் ஆன்லைன் வணிக நிறுவன ஊழியர்கள் பணியாற்றினார்கள். மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் நேற்று காலை முதல் அடைக்கப்பட்டன. அதுபோல் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.
ஓட்டல்களில் பார்சல் சேவை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. டீக்கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட்டன. ஓட்டல்கள், டீக்கடைகளில் உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கப்படவில்லை. ஓட்டல்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் நடைபெற்றது.
பஸ்கள் ஓடவில்லை
மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை துறை, காவல்துறை, ஊர்காவல்படை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட தொழில் மையங்கள், மின்சாரம், குடிநீர், உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டன.
திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டன. மாவட்டங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, வாடகை, டாக்சி, ஆட்டோக்கள் ஆகியவை நேற்று ஓடவில்லை. பஸ் நிலையங்களில் பஸ்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்காக ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்பட்டன.
போலீசார் சோதனை
காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் கடைகள் மதியம் 12 மணி வரை செயல்பட்டன. ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டும் செயல்பட்டன. பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் செயல்பட்டன.
ஜவுளி கடைகள், நகைக் கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பகல் 12 மணி வரை சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகம் காணப்பட்டது. அதன்பிறகு வரும் வாகனங்களை போலீசார் சோதனை செய்து அனுப்பினார்கள். தேவையில்லாமல் வீதியில் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். மதியத்துக்கு மேல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மாவட்டம் முழுவதும் இதே நிலை நீடித்தது.

Next Story