கம்பம் அருகே 2 ஏக்கர் திராட்சை கொடிகளை வெட்டி நாசம் செய்த மர்ம கும்பல்


கம்பம் அருகே 2 ஏக்கர் திராட்சை கொடிகளை வெட்டி நாசம் செய்த மர்ம கும்பல்
x
தினத்தந்தி 10 May 2021 4:26 PM GMT (Updated: 10 May 2021 4:26 PM GMT)

கம்பம் அருகே தனியார் தோட்டத்தில் 2 ஏக்கர் திராட்சை கொடிகளை வெட்டி நாசம் செய்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 52). விவசாயி. இவர் சுருளிபட்டியில், காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த மணிசேகர் என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். அதில், சுமார் 2 ஏக்கர் நிலத்தில் திராட்சை தோட்டம் அமைத்துள்ளார். தற்போது அந்த தோட்டத்தில் உள்ள திராட்சை கொடிகள் நன்கு வளர்ந்து, அதில் கொத்து கொத்தாக திராட்சை பழங்கள் காய்த்து அறுவடைக்கு தயாராக இருந்தன. 
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த தோட்டத்திற்குள் புகுந்த மர்மகும்பல், 2 ஏக்கரில் இருந்த திராட்சை கொடிகளை வெட்டி நாசம் செய்துவிட்டு தப்பியோடிவிட்டது. இதற்கிடையே நேற்று காலை வழக்கம்போல் தோட்டத்திற்கு வந்த கணேசன், திராட்சை கொடிகள் வெட்டப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். 
உடனே இதுகுறித்து அவர், ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், திராட்சை கொடிகளை சேதப்படுத்தியதால் தனக்கு ரூ.5 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story