விழுப்புரம்-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது பஸ்கள் ஓடவில்லை மதியம் 12 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டன
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. பஸ்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின. பகல் 12 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டன.
விழுப்புரம்,
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவலை முற்றிலும் தடுக்கும் நடவடிக்கையாக மே 10-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்திலும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நேற்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையொட்டி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு இடையேயான அரசு, தனியார் பஸ் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. வெளியூர்களில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு திரும்பிய பஸ்கள் அதன் பிறகு இயக்கப்படாமல் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை அந்தந்த போக்குவரத்துக்கழக பணிமனைகளுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன. அதுபோல் தனியார் பஸ்களின் போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
வெறிச்சோடிய பஸ் நிலையங்கள்
போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் எப்போதும் பரபரப்பாகவும், பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும் விழுப்புரம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், செஞ்சி, விக்கிரவாண்டி, மேல்மலையனூர், வானூர் ஆகிய பஸ் நிலையங்கள் மற்றும் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதி, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சின்னசேலம், சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு, கச்சிராயப்பாளையம் பேருந்து நிலையங்கள் பஸ்கள் எதுவும் இல்லாமலும், பயணிகள் இன்றியும் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.
அதுமட்டுமின்றி வாடகை கார், ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களும் ஓடவில்லை. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களின் வசதிக்காக மட்டும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
மளிகை கடைகள் இயங்கின
மேலும் பெரிய கடைகள், வணிக வளாகங்கள், அதில் இயங்கும் கடைகளுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்ததால் நேற்று அந்த கடைகள் திறக்கப்படாமல் பூட்டிக்கிடந்தன. அதுபோல் இதர அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.
அதேநேரத்தில் பொதுமக்களின் வசதிக்காக தனியாக செயல்படும் மளிகை, பலசரக்கு கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் பகல் 12 மணி வரை இயங்கின. அந்த கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி என்பதால் அந்த நடைமுறைகளுடன் கடைகள் இயங்கின.
ஓட்டல்கள்- டீக்கடைகளில் பார்சல் சேவை
மேலும் டீக்கடைகளும் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கின. ஓட்டல்களை பொறுத்தவரை முழு நேரமும் இயங்கியபோதிலும் பொதுமக்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டு பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டது.
அதுபோல் மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள், பெட்ரோல் நிலையங்கள் தடையின்றி 24 மணி நேரமும் இயங்கின. மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களும் தொடர்ந்து செயல்பட்டன. காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகளும் பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டன. பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏதுவாக மாவட்டத்தில் உள்ள 1,254 ரேஷன் கடைகளும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை இயங்கின.
தீவிர கண்காணிப்பு
நகர் புறங்களில் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க மக்கள் நடமாட்டம் இருந்தது. பகல் 12 மணிக்கு மேல் காய்கறி, மளிகை கடைகளும் அடைக்கப்பட்டதால் அதன் பிறகு மக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்து சாலைகள், கடைவீதிகள் வெறிச்சோடின.
முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததை தொடர்ந்து ஊரடங்கை மீறி யாராவது வாகனங்களில் செல்கிறார்களா என்பதை கண்காணிப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி கெங்கராம்பாளையம், சிறுவந்தாடு, தொந்திரெட்டிப்பாளையம், பனையபுரம், பெரும்பாக்கம், கிளியனூர், கோட்டக்குப்பம், அனிச்சங்குப்பம், பட்டானூர் ஆகிய சோதனைச்சாவடிகளிலும் மற்றும் மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் தடுப்புகள் அமைத்தும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு அத்தியாவசிய தேவையை தவிர தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ததோடு அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
இ-பாஸ் உள்ளவர்களுக்கு அனுமதி
மேலும் மாவட்ட எல்லைப்பகுதிகளில் போலீசாரும், வருவாய்த்துறையினரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதோடு இ-பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே மாவட்டத்திற்குள் வருவதற்கு அனுமதி வழங்கினர். இ-பாஸ் இல்லாதவர்களை மாவட்டத்திற்குள் நுழைய விடாமல் எல்லைப்பகுதிகளில் இருந்து அப்படியே திருப்பி அனுப்பினர். விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி மையங்கள் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடியது.
முழு ஊரடங்கு எதிரொலியாக கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மதுபானம் வாங்க டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதிய நிலையில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் அந்த கடைகள் அமைந்துள்ள பகுதி, ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடிகாணப்பட்டது.
Related Tags :
Next Story