விழுப்புரம் மாவட்டத்தில் 5.87 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண முதல் தவணை நிதி விடுபடாமல் வழங்கி முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு


விழுப்புரம் மாவட்டத்தில் 5.87 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண முதல் தவணை நிதி விடுபடாமல் வழங்கி முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 10 May 2021 10:05 PM IST (Updated: 10 May 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 5.87 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண முதல் தவணை நிதியை விடுபடாமல் வழங்கி முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம்,

கொரோனா நிவாரண நிதி

தமிழக அரசின் சார்பில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்றும், இதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் இம்மாதத்திலேயே வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததோடு இத்திட்டத்தை நேற்று சென்னை தலைமை செயலகத்தில் அவர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் மற்ற மாவட்டங்களில் கொரோனா நிவாரண நிதியான முதல் தவணை தொகை வருகிற 15-ந் தேதி முதல் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதியான முதல் தவணை தொகை ரூ.2 ஆயிரத்தை வழங்குவது தொடர்பாக நேற்று காலை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

டோக்கன் 

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை வருவாய்த்துறை, வட்ட வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை, உள்ளாட்சித்துறை இணைந்து செயல்படுத்த உள்ளோம். நமது மாவட்டத்தில் 1,254 ரேஷன் கடைகள் மூலமாக அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணை தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 5 லட்சத்து 87 ஆயிரத்து 850 பேர் பயனடைவார்கள்.
இந்த தொகை வருகிற 15-ந் தேதி முதல் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கடையிலும் நாள் ஒன்றுக்கு 200 பேர் வீதம் கொரோனா நிவாரண நிதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியை கண்காணிக்க துணை தாசில்தார்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அப்பணியில் ஈடுபடுபவர்கள், வீடுகளுக்கு வழங்கப்படும் டோக்கனில் எந்தெந்த தேதியில், எந்தெந்த நேரத்தில் வழங்கப்படும் என்ற விவரங்களை குறிப்பிட்டு வழங்க வேண்டும். டோக்கன் வழங்கும் பணியை 3 நாட்களில் (12-ந் தேதிக்குள்) முடிக்க வேண்டும். 

முன்னுரிமை

ரேஷன் கடைகளை சரியாக காலை 8 மணிக்கு திறந்து நிவாரண நிதி வழங்கும் பணியை தொடங்க வேண்டும். பகல் 12 மணியை கடந்து நிவாரண நிதி வழங்கக்கூடாது. மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வந்தால் அவர்களை வரிசையில் நிற்கச்சொல்லி காக்க வைக்காமல் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங்., மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) பெருமாள், உதவி கலெக்டர் (பயிற்சி) ரூபினா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story