தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பிளஸ்-1 மாணவர் தீக்குளிக்க முயற்சி


தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பிளஸ்-1 மாணவர் தீக்குளிக்க முயற்சி
x

தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், பிளஸ்-1 மாணவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி
தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், பிளஸ்-1 மாணவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீக்குளிக்க முயற்சி
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு, தேவாரத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவர் ஒருவர் தனது தாயுடன் நேற்று மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த மாணவரிடம் விசாரிக்க முயன்றனர்.
அதற்குள் அந்த மாணவர் தனது பையில் மறைத்து எடுத்து வந்த 2 லிட்டர் பெட்ரோல் பாட்டிலை கையில் எடுத்தார். பின்னர் அந்த பாட்டிலை திறந்து தனது தலையில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த போலீசார், உடனடியாக அந்த மாணவரை தடுத்து நிறுத்தினர்.
அப்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், அந்த மாணவர் தனது கண், உடல் எரிவதாகவும், தண்ணீர் கொடுக்குமாறும் கதறினார். பின்னர் போலீசார் தண்ணீர் எடுத்து வந்து மாணவர் மீது ஊற்றினர். 
நிலம் அபகரிப்பு
இதையடுத்து தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து அந்த மாணவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் கூறுகையில், "எனது தாத்தா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். தற்போது அவர் இறந்து விட்டார். அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை குத்தகைக்கு விட்டு இருந்தோம். பின்னர் அந்த நிலத்தை குத்தகையில் இருந்து மீட்டோம். அதில் விவசாயம் செய்ய சென்ற போது சிலர் அந்த நிலத்தை அபகரித்துக்கொண்டு எங்களை மிரட்டுகின்றனர். எனவே, எங்கள் நிலத்தை மீட்டுத்தர வேண்டும். எனது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனது தாய் வாய் பேச இயலாதவர். தேவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், விரக்தி அடைந்து தற்கொலைக்கு முயன்றேன்" என்றார்.
இதையடுத்து அந்த மாணவரையும், அவருடைய தாயையும் தேனி போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி தேவாரம் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story