மாவட்ட செய்திகள்

போடிமெட்டு மலைப்பாதையில் உருண்டு விழுந்த ராட்சத பாறைகள் + "||" + Giant rocks rolling down the hill way

போடிமெட்டு மலைப்பாதையில் உருண்டு விழுந்த ராட்சத பாறைகள்

போடிமெட்டு மலைப்பாதையில் உருண்டு விழுந்த ராட்சத பாறைகள்
கனமழை எதிரொலியாக போடிமெட்டு மலைப்பாதையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் அந்த பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போடி:
கனமழை எதிரொலியாக போடிமெட்டு மலைப்பாதையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் அந்த பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்ல தேனி மாவட்டத்தில் போடிமெட்டு, கம்பம்மெட்டு மற்றும் குமுளி ஆகிய 3 மலைப்பாதைகள் உள்ளன. இந்த பாதைகள் வழியாக கேரளாவுக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. 
தற்போது கொரோனா பரவல் காரணமாக, தமிழகம் மற்றும் கேரளாவில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே 2 மாநிலங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. 
இதற்கிடையே தேனி மாவட்டத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கொட்டக்குடி, வைகை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
ராட்சத பாறைகள்
இந்தநிலையில் போடி மலைப்பகுதியில் பெய்த கனமழை எதிரொலியாக, போடிமெட்டு மலைப்பாதையில் ஆகாச பாறைக்கு கீழ்புறம் 8-வது கொண்டை ஊசி வளைவுக்கு அருகே நேற்று முன்தினம் இரவு திடீரென்று ராட்சத பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. இதில், சாலையில் விரிசல் ஏற்பட்டது. மேலும் சாலையோர தடுப்புகள் சேதமடைந்தது. 
அதிர்ஷ்டவசமாக பாறைகள் உருண்ட நேரத்தில், வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சாலையில் பாறைகள் உருண்டதால், போடிமெட்டு மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 
மேலும் அந்த வழியாக வந்த வாகனங்கள், கம்பம்மெட்டு வழியாக திருப்பி விடப்பட்டன. பின்னர் வனத்துறையினர், தீயணைப்பு படைவீரர்களுடன் இணைந்து பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
வெடி வைத்து...
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், போடிமெட்டு மலைப்பாதையில் விழுந்த பாறைகளை அப்புறப்படுத்தும் பணி 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதனால் இந்த பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாறைகள் விழுந்த இடத்தில் இருந்து 20 மீட்டர் உயரத்தில் மற்றொரு பெரிய பாறை விழும் நிலையில் உள்ளது. இதனை இன்று (செவ்வாய்க்கிழமை) வெடி வைத்து தகர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆய்வு செய்வதற்காக நெடுஞ்சாலை துறை மதுரை கோட்ட பொறியாளர் சேதுராஜன் இன்று ஆய்வு செய்யவுள்ளார் என்றனர்.