கர்நாடகத்திற்கு தினமும் 35 ஆயிரம் ‘டோஸ்’ ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுகிறது


கர்நாடகத்திற்கு தினமும் 35 ஆயிரம் ‘டோஸ்’ ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுகிறது
x
தினத்தந்தி 10 May 2021 11:44 PM IST (Updated: 10 May 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்திற்கு தினமும் 35 ஆயிரம் ‘டோஸ்’ ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுவதாக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.

பெங்களூரு:

ரெம்டெசிவிர் மருந்து
பெங்களூருவில் உள்ள கட்டளை மையத்திற்கு (வார் ரூம்) துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் நேரில் வந்து ஆய்வு செய்தார். அங்கு பணியாற்றும் ஊழியர்களுடன் ஆலோசனை நடத்தினார். 
அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து வினியோகம் செய்வதில், வெளிப்படைத்தன்மை மிக முக்கியம் ஆகும். 

கர்நாடகத்திற்கு தினமும் 35 ஆயிரம் ‘டோஸ்’ ரெம்டெசிவிர் மருந்து  தேவைப்படுகிறது. அத்துடன் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. அரசு-தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் நிலை குறித்து அரசின் இணையதள பக்கத்தில் வெளியிடப்படும்.

பரிசோதனை முடிவுகள்

இதன் மூலம் அனைத்திலும் வெளிப்படைத்தன்மை ஏற்படும். இதனால் பொதுமக்கள் அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். பெங்களூருவில் கொரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பி.யு. எண்ணையும் உடனே வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பரிசோதனை முடிவுகள் தாமதமாவதால் வைரஸ் பரவல் அதிகரிக்கும். இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பரிசோதனை முடிவுகளை தாமதமாக வழங்கும் ஆய்வகங்களுக்கு ஒரு பரிசோதனைக்கு தலா ரூ.150 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ படுக்கைகள்

பெங்களூருவில் ஒரு நாளைக்கு 900 படுக்கைகள் காலியாகின்றன. ஆனால் மருத்துவ படுக்கை தேவைப்படுவோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. பெங்களூருவில் தகுதியானவர்களுக்கு மட்டுமே மருத்துவ படுக்கை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் யார் என்பதை கண்டறிய வார்டு அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொரோனா சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் வசதி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகத்தில் 20 ஆயிரம் மருத்துவ படுக்கைகளை அதிகரிக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 4 ஆயிரம் படுக்கைகள் அமைக்கப்படுகின்றன.

ஆக்சிஜன் ஒதுக்கீடு
கர்நாடகத்திற்கு 1,200 டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. வீட்டு தனிமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் ஆக்சிஜன் அளவை பரிசோதிக்கும் பல்ஸ் ஆக்சிமீட்டர் உபகரண தேவை அதிகரித்துள்ளது.

இந்த உபகரணத்தின் விலை நிர்ணயிக்கப்பட்ட விலையில் தான் விற்பனை செய்ய வேண்டும். அதிக விலைக்கு விற்றால் அத்தகைய மருந்து கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பல்ஸ் ஆக்சிமீட்டர் உபகரணங்களை அதிகளவில் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

Next Story