2 நாட்களில் ரூ.28½ கோடிக்கு மது விற்பனை
கடலூர் மாவட்டத்தில் 2 நாட்களில் மொத்தம் ரூ.28½ கோடிக்கு மதுவிற்பனை ஆகியுள்ளது.
கடலூர் முதுநகர்,
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாக்குவதற்காக 2 நாட்கள் அனைத்து கடைகளும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. இதை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர்.
இதேபோல் டாஸ்மாக் கடைகளிலும் மது பிரியர்கள் குவிந்து தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை பெட்டி, பெட்டியாக வாங்கிச்சென்றனர். இதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்த சனிக்கிழமை அன்று மொத்தம் ரூ.13 கோடியே 13 லட்சத்து 43 ஆயிரத்துக்கு மதுபாட்டில்கள் விற்பனையாகின.
புதிய உச்சம்
இதேபோல் ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த விற்பனையில் மொத்தம் ரூ.15 கோடியே 34 லட்சத்து 38 ஆயிரத்து 300-க்கும் மதுபாட்டில்கள் விற்றுத்தீர்ந்தன. 2 நாட்களையும் சேர்த்து மொத்தம் 28 கோடியே 47 லட்சத்து 81 ஆயிரத்து 300 ரூபாய்க்கு மதுபாட்டில்கள் விற்பனையாகியுள்ளன. இந்த விற்பனை கடலூர் மாவட்டத்தின் புதிய உச்சமாகும். கடலூர் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.3 கோடி வரை மதுபாட்டில்கள் விற்பனையாகி வருகின்றன. ஆனால் தற்போது அது பல மடங்கு உயர்ந்து புதிய சாதனையை படைத்துள்ளது.
Related Tags :
Next Story