ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட 2 நாட்களில் தஞ்சை மாவட்டத்தில் ரூ.31¾ கோடிக்கு மது விற்பனை


ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட 2 நாட்களில் தஞ்சை மாவட்டத்தில் ரூ.31¾ கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 10 May 2021 7:56 PM GMT (Updated: 10 May 2021 7:56 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட 2 நாட்களில் ரூ.31 கோடியே 83 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது.

தஞ்சாவூர்:-

தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட 2 நாட்களில் ரூ.31 கோடியே 83 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது.

கொரோனா 2-வது அலை

தமிழகத்தில் தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி நேற்று முதல் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு முழு அடைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. முழு அடைப்பை முன்னிட்டு டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு கடந்த சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் மட்டும் தளர்வு அளிக்கப்பட்டு கடைகள் கூடுதல் நேரம் திறக்கப்பட்டன. தளர்வுக்கு முன்பாக மதுக்கடைகள் கொரோனா கட்டுப்பாடுகளின்படி காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்து வைக்கப்பட்டு, மது வியாபாரம் நடந்தது. 

பெட்டி, பெட்டியாக...

முழு ஊரடங்கின்போது மதுக்கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும் என்பதால் தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை முன்கூட்டியே வாங்கி குவிப்பதற்கு கடந்த சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களை மதுப்பிரியர்கள் முழுமையாக பயன்படுத்தி கொண்டனர்.
இதன் காரணமாக அந்த 2 நாட்களும் மதுக்கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. மதுப்பிரியர்கள் பெட்டி, பெட்டியாக மது வகைகளை வாங்கி சென்றதால், பண்டிகை காலங்களை விட அதிக அளவில் டாஸ்மாக் கடைகளுக்கு வருவாய் குவிந்தது. 

வழக்கமான வசூல்

தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 161 டாஸ்மாக் கடைகள் உள்ளன. வழக்கமான நாட்களில் இந்த கடைகளில் ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை வசூலாகும். 
ஆனால் முழு ஊரடங்கினால் டாஸ்மாக் கடைகள் அடைப்பு என்பதால் 8-ந் தேதி (சனிக்கிழமை) ஒரு நாள் மட்டும் ரூ.15 கோடியே 42 லட்சத்து 35 ஆயிரத்து 700-க்கு மது விற்பனை நடைபெற்றது. நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) ரூ.16 கோடியே 41 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

ரூ.31.83 கோடிக்கு விற்பனை

அதாவது கடந்த சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களில் மட்டும் ரூ.31 கோடியே 83 லட்சத்து 35 ஆயிரத்து 700-க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story