கொரோனா குறித்து பயமில்லை; ஊரடங்கு பற்றி கவலையில்லை
கொரோனா குறித்து பயமில்லை. ஊரடங்கு பற்றி கவலையில்லாமல் சாலைகளில் பொதுமக்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர்
மதுரை
போலீசாரின் கெடுபிடி இல்லாததால் கொரோனா குறித்து பயமில்லை. ஊரடங்கு பற்றி கவலையில்லாமல் சாலைகளில் பொதுமக்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர்.
தொழிற்சாலைகள்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதன்காரணமாக நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிற 24-ந் தேதி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் மளிகை-காய்கறி கடைகள், டீக்கடைகள் மற்றும் பகல் 12 மணி வரை திறந்து இருக்கும். மற்ற அனைத்து கடைகளும் அடைத்து இருக்கும். ஓட்டல்களில் பார்சல்கள் மட்டும் வழங்கலாம். அதேபோல் அத்தியாவசிய பொருட்களை தயார் செய்யும் தொழிற்சாலைகள் மட்டும் செயல்படலாம். அதன் ஊழியர்கள் தங்களது அடையாள அட்டையுடன் பணிக்கு செல்லலாம். மற்ற அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட வேண்டும்.
நேற்று ஊரடங்கு தொடங்கிய நிலையில் மதுரை அதற்கான அறிகுறிகள் இல்லாமல் இருந்தது. ஆட்டோ-பஸ் போக்குவரத்து மட்டும் தான் இல்லை. மற்றப்படி சாலைகளில் அதிக அளவில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை காண முடிந்தது. அதேபோல் மளிகை கடைகள் தவிர பெட்டி கடைகள் உள்பட சிறிய கடைகள் திறந்து இருந்தன. பல இடங்களில் சாலையோர வடை கடைகள், காய்கறி கடைகள் செயல்பட்டன. எப்போதும் பரபரப்பாக இயங்கும் பெரியார் பஸ் நிலையம், மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையம் பஸ் நிலையங்கள் பஸ்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. ஷேர் ஆட்டோ மற்றும் ஆட்டோக்களால் அதன் ஒலி சத்தம் அதிகளவில் இருக்கும். ஆனால் நேற்று ஆட்டோக்கள் ஓடாததால் சாலைகள் அமைதியாக இருந்தன.
போக்குவரத்து சிக்னல்கள்
கடந்தாண்டு ஊரடங்கின் போது மதுரை நகரில் கோரிப்பாளையம், காளவாசல், தெற்குவாசல் போன்ற இடங்களில் எல்லாம் போக்குவரத்து சிக்னல்கள் தேவை இல்லாமல் இருந்தது. அதாவது வாகனமின்றி இந்த பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆனால் நேற்று இந்த இடங்களில் வழக்கம் போல் போக்குவரத்து சிக்னல்கள் செயல்பட்டன. அதே போல் எப்போதும் கீழமாசி வீதியில் உள்ள அனைத்து கடைகளும் செயல்பட்டு வந்தன. போலீசாரின் கெடுபிடி இல்லாததால் ஊரடங்கிற்கான அறிகுறி இல்லாமல் இருந்தது. மேலும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை அந்தந்த பகுதிகளில் வாரச்சந்தைகள் நடக்கின்றன. அதிலும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வில்லை.
இதுகுறித்து போலீசார் சிலர் கூறியதாவது:-
கடந்த முறை ஊரடங்கின் போது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டன. மக்களுக்கு கொரோனா குறித்த பயம் அதிகளவில் இருந்தது. ஆனால் இப்போது கொரோனா மீதான பயம் போய் விட்டது. எனவே ஊரடங்கு குறித்தும், கொரோனா குறித்தும் மக்கள் கவலைப்பட வில்லை. எப்போதும் போல் தங்கள் அன்றாட வேலைகளை பார்த்து வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா பரவலை தடுப்பதற்காக பரவை, மாட்டுத்தாவணி உள்பட நகரில் உள்ள அனைத்து மார்க்கெட்டுகளும் மூடப்பட்டன. அதே போல் கீழமாசி வீதியில் சில்லரை வியாபாரம் நடத்தும் கச்சாத்து கடைகள் அடைக்கப்பட்டன. வாரச்சந்தைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
கீழமாசி வீதி
ஆனால் இப்போது எந்த கட்டுப்பாடும் இல்லை. மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை. நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை போலீசார் மைக் மூலம் செய்த எச்சரிக்கையை அவர்கள் பொருட்படுத்தவில்லை. வீட்டு அருகில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள், தேவையில்லாமல் வெளியே வராதீர்கள் என்று எச்சரிக்கிறோம். ஆனால் பல கடைகளை தாண்டி, கீழமாசி வீதிக்கு தான் இன்னும் வருகின்றனர். கடந்த முறை தேவையில்லாமல் சாலையில் சுற்றி திரிந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் இந்த முறை போலீசார் கனிவோடு நடக்க வேண்டும் என்பதால் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கிறோம். நாங்கள் கனிவோடு நடந்தால், மக்கள் பொறுப்போடு நடக்க வேண்டும். ஆனால் பொதுமக்கள் அப்படி இருப்பதில்லை. பகல் 12 மணிக்கு மேல் கூட வாகனத்தில் சுற்றி கொண்டு இருக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story