சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம் போலீஸ் பாதுகாப்புடன் வினியோகம்
சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் போலீஸ் பாதுகாப்புடன் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டன.
சேலம்:
சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் போலீஸ் பாதுகாப்புடன் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டன.
ரெம்டெசிவிர் மருந்து விற்பனை
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து தமிழக அரசு சார்பில் சென்னை கீழ்பாக்கம், சேலம், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய 6 அரசு மருத்துவக்கல்லூரிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி சேலம் இரும்பாலை அருகே உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கடந்த 8-ந் தேதி தொடங்கியது. அன்று 200 பேருக்கு மட்டுமே மருந்து விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மருந்து விற்பனை செய்யப்படவில்லை. இதனால் ஏராளமான பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
நள்ளிரவு முதல்...
இந்தநிலையில், நேற்று சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டது. இதனை வாங்க சேலம் மட்டுமின்றி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் நள்ளிரவு 2 மணி முதலே திரண்டு வந்தனர்.
இதனால் அரசு மருத்துவக்கல்லூரியில் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் வரிசையாக செல்ல கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
கூட்டம் அலைமோதியது
இதனிடையே காலை 10 மணிக்கு ரெம்டெசிவிர் மருந்து வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்த சற்று சிரமப்பட்டனர். பின்னர் பொதுமக்கள் நீண்ட வரிசையில் தரையில் அமர்ந்து காத்திருந்தனர். ஆனால் குறைந்த அளவே ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கு வந்திருந்தது.
இதைத்தொடர்ந்து வரிசையில் காத்திருந்த ஒவ்வொரு நபரிடமும் டாக்டரின் பரிந்துரை கடிதம், கொரோனா பரிசோதனை முடிவு, கொரோனா நோயாளிக்கு எடுக்கப்பட்ட சி.டி.ஸ்கேன் மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட சான்றிதழ்களை மருத்துவத்துறையினர் பெற்று, சரிபார்த்து அவர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்தனர். பின்னர் ரூ.9 ஆயிரத்து 500 கட்டணமாக பெற்றுக்கொண்டு ரெம்டெசிவிர் மருந்துகள் வழங்கப்பட்டன.
போலீஸ் கமிஷனர் ஆய்வு
ஆனால் நேற்று 220 பேருக்கு மட்டுமே மருந்துகள் வழங்கப்பட்டதால் அங்கு பல மணிநேரம் காத்திருந்தவர்கள் மருந்துகள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இருப்பினும் வரிசையில் பல மணி நேரம் நின்றவர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் எப்படியாவது ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்கி செல்ல வேண்டும் என்ற காரணத்தால் அங்கேயே காத்திருந்ததை காணமுடிந்தது.
இதனிடையே, சேலம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு மருந்துகள் வாங்க கூட்டம் அதிகமாக இருந்ததை அறிந்த போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் நேற்று மதியம் அங்கு வந்தார். பின்னர் அவர், ரெம்டெசிவிர் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதையும், பாதுகாப்பு பணியையும் ஆய்வு செய்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில்...
அப்போது, வரிசையில் நின்ற சிலர், இங்கு வந்திருக்கும் எல்லோரும் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள். நோயாளிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருப்பதால் மருந்துகளை வாங்க வந்துள்ளோம். எனவே, கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி மருந்துகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டனர். அதற்கு மருந்துகள் தட்டுப்பாடு நிலவுவதால் டோக்கன் அடிப்படையில் வினியோகம் செய்யப்படும் என்றும், அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்குமாறும் போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் தெரிவித்தார்.
இதனிடையே நாளை (அதாவது இன்று) காலை மருந்துகள் விற்பனை செய்யப்படும் என்று மருத்துவக்கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் வரிசையில் நின்ற மக்கள் யாரும் தங்களது வீடுகளுக்கு செல்லாமல் அங்கேயே நின்றபடி இருந்தனர்.
Related Tags :
Next Story