ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண தொகை: வீடு, வீடாக குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகம்


ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண தொகை: வீடு, வீடாக குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகம்
x
தினத்தந்தி 11 May 2021 2:00 AM IST (Updated: 11 May 2021 2:00 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண தொகை பெறுவதற்காக வீடு, வீடாக குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.

சேலம்:
சேலத்தில் ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண தொகை பெறுவதற்காக வீடு, வீடாக குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.
கொரோனா நிவாரணம்
தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றவுடன் தேர்தல் அறிக்கையில் கூறியபடி கொரோனா நிவாரண தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த திட்டத்தை நேற்று சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கினார். மாவட்டம் வாரியாக இந்த நிவாரண தொகை ரேஷன் கடைகள் மூலம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் 1,571 ரேஷன் கடைகள் மூலம் சுமார் 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தினமும் 200 பேருக்கு நிவாரண தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நேற்று சம்பந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யும் பணிகள் தொடங்கியது.
டோக்கன் வினியோகம்
சேலம் மாநகரில் முள்ளுவாடி கேட், மணக்காடு, கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக கொரோனா நிவாரண தொகைக்கான டோக்கன் வினியோகம் செய்யும் பணிகள் நடந்தது. அந்த டோக்கனில் ரேஷன் கடையின் பெயர், குடும்ப அட்டைதாரரின் பெயர், டோக்கன் எண், கிராமம் அல்லது தெரு போன்ற விவரங்கள் எழுதப்பட்டிருந்தது.
இது குறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக வருகிற 14-ந் தேதி வரை ரேஷன் கடை விற்பனையாளர்கள், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நேரடியாக வீடுகளுக்கு சென்று டோக்கன் வினியோகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வருகிற 15-ந் தேதி முதல் கொரோனா நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் ரேஷன் கடைகளில் வழங்கப்படும், என்றனர்.

Next Story