முழு ஊரடங்கால் கடைகள் அடைப்பு; வீதிகள் வெறிச்சோடின


முழு ஊரடங்கால் கடைகள் அடைப்பு; வீதிகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 10 May 2021 8:34 PM GMT (Updated: 10 May 2021 8:34 PM GMT)

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து அரியலூர் மாவட்டத்தில் மதியம் 12 மணிக்கு பின்னர் கடைகள் அடைக்கப்பட்டன. வீதிகள் வெறிச்சோடின. தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அரியலூர்:

முழு ஊரடங்கு
கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசின் சார்பில் நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி அரியலூர் நகரில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை காய்கறி, மளிகை, பழக்கடைகள், கோழி, மீன், இறைச்சி கடைகள் மற்றும் டீக்கடைகள், ஓட்டல்கள் திறந்திருந்தன. சாலையோர காய்கறி கடைகள், பூக்கடைகள் செயல்பட்டன.
மதியம் 12 மணிக்கு பின்னர் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. பால் கடை, மருந்து கடை, மருத்துவமனை ஆகியவை திறந்திருந்தன. ஆட்டோ, கார், அரசு மற்றும் தனியார் பஸ்கள், பகல்நேர பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ெரயில்கள் ஓடவில்லை. வழக்கம்போல் நகரில் இருசக்கர வாகன போக்குவரத்து இருந்தது.
வீதிகள் வெறிச்சோடின
அரியலூர் போலீசார் சாலைகளின் முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்து, முக கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களிடம் அபராதம் வசூலித்தனர். மேலும் தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து, மீண்டும் தேவையின்றி வெளியே வந்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரித்து அனுப்பினர்.
பஸ் நிலையம், ெரயில் நிலையம், காந்தி மார்க்கெட், மார்க்கெட் தெரு உள்பட நகரின் முக்கிய வீதிகள் வெறிச்சோடின. அப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. நகராட்சி தூய்மை பணியாளர்கள் வழக்கம்போல் தங்கள் பணியை செய்தனர்.
ஜெயங்கொண்டம், ஆண்டிமடம்
ஜெயங்கொண்டம் பகுதியில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டன. 4 ரோடு பகுதியில் போலீசார் தேவையின்றி சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து, ஒருவருக்கு ரூ.500 வீதம் 6 பேருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர். பின்னர் இளைஞர்களுக்கு முககவசம் அணிவது உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தி, தேவையின்றி சுற்றித் திரியக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் முகப்பில் தடுப்புகள் வைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.
ஆண்டிமடம் பகுதியில் நேற்று காலை முதல் மதியம் வரை அனுமதிக்கப்பட்ட கடைகள் மட்டும் திறந்திருந்தன. அத்தியாவசிய பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முக கவசம் அணிந்து அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர். மதியம் 12 மணிக்கு பிறகு கடைகள் மூடப்பட்டதால், கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது. கட்டுமான பணிகள் வழக்கம்போல் நடைபெற்றது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், அரசு அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டனர். ஆண்டிமடம் 4 ரோடு சந்திப்பு பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தா.பழூர், உடையார்பாளையம்
தா.பழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் 12 மணி வரை மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட கடைகள் திறந்து வைக்கப்பட்டு இருந்தன. பின்னர் மருந்து கடைகள், பால் கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பெரும்பாலான மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருந்த நிலையில், சிலர் கார்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும், மொபெட்டுகளிலும் பல்வேறு இடங்களுக்கு பயணித்தனர். போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வீதிகளிலும், சாலைகளிலும் வாகனங்களில் திரிந்தவர்களுக்கு அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மதனத்தூர் சோதனையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு அந்த வழியாக விதிமுறைகளை மீறி வந்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறி அனுப்பினர்.
உடையார்பாளையம் பகுதியில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டன. தத்தனூர் மேலூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் முன்பு நேற்று சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்கள் கூட்டமாக நின்றனர். மேலும் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டன.

Next Story