முழு ஊரடங்கால் பஸ்கள் ஓடவில்லை; சாலைகள் வெறிச்சோடின
பெரம்பலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பஸ்கள் ஓடவில்லை. சாலைகள் வெறிச்சோடின.
பெரம்பலூர்:
முழு ஊரடங்கு அமல்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வந்தது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த நிலையில் தமிழக அரசு நேற்று அதிகாலை 4 மணி முதல் வருகிற 24-ந்தேதி அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டது. அதன்படி முழு ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
மளிகை-காய்கறி கடைகள் திறப்பு
முழு ஊரடங்கின்போது மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள், மீன், இறைச்சி கடைகள், டீக்கடைகள் ஆகியவற்றை மதியம் 12 மணி திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதால், அந்த கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது. அந்த கடைகளில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையானவற்றை மதியம் 12 மணிக்குள் வாங்கிச்சென்றனர்.
டீக்கடைகள் திறக்கப்பட்டிருந்தபோதும், அங்கு உட்கார்ந்து டீக்குடிக்க அனுமதி மறுக்கப்பட்டது. பூக்கடைகள் திறக்கப்பட்டிருந்தன. வங்கிகள் வழக்கம்போல் இயங்கியநிலையில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அலைமோதியது. ரேஷன் கடைகள் மதியம் 12 மணி வரை செயல்பட்டது.
கடைகள் அடைப்பு
கடைகள் மதியம் 12 மணிக்கு மூடப்பட்டதாலும், இதர கடைகள் திறக்கப்படாததாலும் மாவட்டத்தில் உள்ள கடைவீதிகள் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. முழு ஊரடங்கில் அரசு அறிவித்த நேரங்களில் ஓட்டல்களில் பார்சலாக உணவு விற்பனை செய்யப்பட்டது.
பெரம்பலூரில் புதிய பஸ் நிலையம், அரசு மருத்துவமனை ஆகியவற்றில் அம்மா உணவகங்கள் வழக்கம்போல் இயங்கின. ஆதரவற்றவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் உணவு வழங்கப்பட்டது. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தாலும், சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்றது.
வெறிச்சோடின
முழு ஊரடங்கில் அரசு மற்றும் தனியார் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், ஷேர் ஆட்டோக்கள், கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இடங்களான பெரம்பலூர் புதிய, பழைய பஸ் நிலையங்கள், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நான்கு ரோடு, மூன்று ரோடு, திருமாந்துறை சுங்கச்சாவடி உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மற்றும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
அரசு பஸ்கள் பெரம்பலூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தனியார் பஸ்கள், லாரிகள், ஆட்டோக்கள் மற்றும் கனரக வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை
முழு ஊரடங்கில் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைகள், மருந்து கடைகள், ஆம்புலன்ஸ் சேவை, பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்கள், பால் விற்பனை நிலையங்கள் ஆகியவை தடையில்லாமல் இயங்கின. தூய்மை பணியாளர்கள் நேற்று வழக்கம்போல் பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மதியம் 12 மணி வரை மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள், மீன், இறைச்சி கடைகள் திறக்கப்பட்டிருந்ததால் பெரம்பலூர் மாவட்ட பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
மங்களமேடு
மங்களமேடு பகுதியில் லெப்பைக்குடிக்காட்டில் காலை 12 மணிவரை டீக்கடை, மளிகை, காய்கறி கடைகள் என ஒருசில கடைகள் மட்டும் திறந்திருந்தன. அந்த கடைகளில் வியாபாரம் சுமாராகவே இருந்ததாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர். மேலும் வாலிகண்டபுரம், அகரம் சீகூர் உள்பட பல கிராமங்களில் பகல் 12 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் தெருக்கள் வெறிச்சோடின. இதேபோல் திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியில் வாகனங்கள் அதிக அளவில் செல்லாததால் பெரும்பாலும் வெறிச்சோடியது. பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர்.
Related Tags :
Next Story