தொழிலாளி அடித்துக் கொலை; தம்பி உள்பட 2 பேர் கைது


தொழிலாளி அடித்துக் கொலை; தம்பி உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 May 2021 2:12 AM IST (Updated: 11 May 2021 2:12 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை அருகே தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய தம்பி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அந்தோணியார்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மிக்கேல் தயாளன் (வயது 45), தொழிலாளி. இவருக்கும், இவரது தம்பி மில்டன், பெரியப்பா மகன் ராபின்சன் ஆகியோருக்கும் இடையே கடந்த 5-ந் தேதி மதுபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த மில்டன், ராபின்சன் ஆகியோர் சேர்ந்து மிக்கேல் தயாளனை கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த மிக்கேல் தயாளன் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மிக்கேல் தயாளன் இறந்தார். இதுபற்றி அவரது மனைவி அமலா வளர்மதி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மில்டன், ராபின்சன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ராதாபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ஸ்ரீவைகுண்டம் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

Next Story