அம்பை அருகே குப்பைகள் கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு
அம்பை அருகே குப்பைகள் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்பை:
அம்பை அருகே உள்ள வேலாயுதநகர் அருகில் வாகைகுளம் பகுதியில் அம்பை நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு உள்ளது. நகராட்சியின் 21 வார்டுகளிலும் உள்ள வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு, பின்னர் தரம் பிரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும். இந்நிலையில் அந்த குப்பைக்கிடங்கில் குப்பைகள் முழுவதுமாக தரம் பிரிக்கப்படுவதால் இடமில்லாமல் நகராட்சியில் 3 பகுதியில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மக்கும் குப்பைகளை பயோமெட்ரிக் முறையில் நுண் உரமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இதுதவிர 21 வார்டுகளிலும் பிரிக்கப்படும் மக்காத குப்பைகளை நகராட்சியின் குப்பைக்கிடங்கின் அருகில் உள்ள பகுதியில் கொட்டப்பட்டதாக தெரிகிறது. இதில் அவ்வப்போது தீப்பற்றி எரிந்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளில் புகை மண்டலமாகவும் சுவாசிக்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசி உள்ளது. எனவே திறந்தவெளியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலாயுதநகர் பகுதி மக்கள் நகராட்சி ஆணையரிடம் ஏற்கனவே மனு அளித்திருந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் நேற்று அதே பகுதியில் நகராட்சி வாகனம் குப்பை கொட்ட வந்தபோது அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து குப்பை வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்ததும் அம்பை போலீசார் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் ஆகியோர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story