ஆழ்வார்குறிச்சி அருகே தாய் தீக்குளித்து தற்கொலை; இரட்டைக்குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை
ஆழ்வார்குறிச்சி அருகே குடும்ப தகராறில் தாய் தீக்குளித்து இறந்தார். அப்போது தீக்காயம் அடைந்த இரட்டைக்குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடையம்:
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள பரும்பு வேம்படி காலனி தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். கூலி தொழிலாளி. அவருடைய மனைவி பார்வதி (வயது 40). இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 ஆண்டுகள் ஆகிறது. 3½ வயதில் கலைமதி, அன்னலட்சுமி என்ற இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் பார்வதி நேற்று மதியம் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தனது அண்ணன் மகளை பார்த்து வருவதாக கண்ணனிடம் கூறினார். அதற்கு அவர், தற்போது உள்ள சூழ்நிலையில் அங்கு செல்ல வேண்டாம் என்றும், நமக்கு குழந்தைகள் உள்ளதால் இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம் எனவும் கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றவே கண்ணன் தனது வீட்டின் பின்புறம் கை கால்களை கழுவச் சென்றார். இதற்கிைடயே, பார்வதி தன் மீதும், குழந்தைகளின் மீதும் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு கண்ணன் ஓடி வந்தார். அப்போது குழந்தைகள் மீது தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உடனடியாக குழந்தைகள் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். பார்வதியை பார்க்க சென்றபோது அதற்குள் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்ததும் ஆழ்வார்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். தீக்காயம் அடைந்த குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பார்வதியின் உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆலங்குளம் துணை சூப்பிரண்டு பொன்னி வளவன், ஆலங்குளம் மகளிர் இன்ஸ்பெக்டர் அங்கயற்கண்ணி ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக தென்காசி உதவி கலெக்டர் ராமச்சந்திரன் மேல் விசாரணை நடத்தி வருகிறார். குடும்ப தகராறில் தாய் தீக்குளித்து இறந்ததும், அதில் தீக்காயம் அடைந்த இரட்டைக்குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதும் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story