முழுஊரடங்கால் தென்காசி வெறிச்சோடியது
முழுஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கியதால் தென்காசி வெறிச்சோடி காணப்பட்டது.
தென்காசி:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல் வருகிற 24-ந் தேதி வரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தி அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தென்காசி மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி நேற்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. மளிகை கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் ஆகியவை மட்டும் மதியம் 12 மணி வரை செயல்பட்டன. அதன்பிறகு அந்த கடைகளும் அடைக்கப்பட்டன. மருந்து கடைகள், பெட்ரோல் பங்க்குகள் இயங்கின. முடி திருத்தும் கடைகள் திறக்க அனுதிக்கப்படவில்லை.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சுவாமி சன்னதி பஜார், அம்மன் சன்னதி பஜார், கூலக்கடை பஜார், மேல ஆவணி மூலவீதி, பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் இயங்காததால் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களும் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. இருசக்கர வாகனங்களில் மட்டும் சிலர் சென்று வந்தனர்.
மாவட்டத்தில் போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருசக்கர வாகனங்களில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது உரிய காரணம் இல்லாமல் வெளியே சுற்றித்திரிந்தவர்களை எச்சரித்து அனுப்பினர். முழு ஊரடங்கையொட்டி செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், பாவூர்சத்திரம், ஆலங்குளம், சிவகிரி, வாசுதேவநல்லூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின
தமிழக -கேரள எல்லை பகுதியில் செங்கோட்டை அருகே இருக்கும் புளியரை வாகன சோதனைச்சாவடி வழியாக கேரளாவிற்கு செல்லும் பால், காய்கறி, மளிகை பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. மேலும் கொரோனா தடுப்பு சோதனைச்சாவடி மருத்துவ முகாமில் சுகாதார ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் கேரளா வழியாக தமிழகம் வரும் பயணிகளுக்கு புளியரை கொரோனா தடுப்பு சிறப்பு முகாமில் மருத்துவ பரிசோதனை செய்த பின்பு தமிழகத்திற்குள் வர அனுமதிக்கப்படுகின்றனர்.
Related Tags :
Next Story