அமராவதி ஆற்றில் பிணமாக மிதந்த தொழிலாளி


அமராவதி ஆற்றில் பிணமாக மிதந்த தொழிலாளி
x
தினத்தந்தி 11 May 2021 3:25 AM IST (Updated: 11 May 2021 3:25 AM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் அருகே குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்து நகையை பறித்து சென்ற தொழிலாளி அமராவதி ஆற்றில் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மடத்துக்குளம்
மடத்துக்குளம் அருகே குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்து நகையை பறித்து சென்ற தொழிலாளி அமராவதி ஆற்றில் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
தொழிலாளி
மடத்துக்குளம் அருகே உள்ள கணியூர் மதிநகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கார்த்திகா (29).  சரவணன் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை சம்பளம் வாங்கும் போது, அதிகமாக மதுகுடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். 
இந்த நிலையில் சரவணன் நேற்று முன்தினம் சம்பளத்தை வாங்கிக்கொண்டு, கணியூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று, மதுபானம் வாங்கி அதிகமாக குடித்துள்ளார். பின்னர் குடிபோதையில் வீட்டுக்கு சென்ற சரவணன் தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். 
அப்போது மனைவியின் கழுத்தில் இருந்த அரை பவுன் நகையை பறித்துக்கொண்டு கடத்தூர்- கணியூர் சாலையில் அமைந்துள்ள அமராவதி ஆற்றுப்பாலத்திற்கு கீழ்ப்பகுதிக்கு சென்றார். பின்னர் மாலை 6 மணி அளவில் மனைவி கார்த்திகா, தனது கணவர் சரவணனை காணாமல், சந்தேகப்பட்டு வழக்கமாக செல்லும், அமராவதி ஆற்றுப் பாலத்திற்கும் கீழே சென்று தேடினார். 
அப்போது அங்கிருந்த சரவணனை வீட்டுக்கு வரும்படி சட்டையை பிடித்து இழுத்தார்.   ஆனால் வீட்டிற்க்கு வர மறுத்த சரவணனை அங்கேயே விட்டுவிட்டு மனைவி கார்த்திகா வீட்டுக்கு வந்தார்.
போலீசார் விசாரணை
இந்த நிலையில் நேற்று அதிகாலை நேரத்தில் அமராவதி ஆற்றுப்பாலத்துக்கு அடியில் தண்ணீரில் ஆண் பிணம் ஒன்று  கிடப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 
இந்த தகவலை அறிந்த, சரவணனின் மனைவி கார்த்திகா அமராவதி ஆற்றுப்பாலத்தின் கீழ் சென்று பார்த்தபோது அங்கு பிணமாக மிதந்தவர் தனது கணவர் சரவணன் என அடையாளம் காட்டினார். 
இதையடுத்து பிணமாக கிடந்த சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதனையடுத்து சரவணன் நகைக்காக தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது மதுபோதையில் ஆற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா? என பல்வேறு கோணங்களில் கணியூர் போலீசார் வழக்குப்பதிவு   செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Next Story