வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் போலீஸ் ஏட்டிடம் 10 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு


வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் போலீஸ் ஏட்டிடம் 10 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 11 May 2021 4:05 AM IST (Updated: 11 May 2021 4:05 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் போலீஸ் ஏட்டிடம் 10 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


திருவெறும்பூர், 
திருச்சி அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் போலீஸ் ஏட்டிடம் 10 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெண் போலீஸ் ஏட்டு

திருச்சி கே.கே.நகர் காஜாமலை மெயின் ரோட்டை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி ராஜாமணி (வயது 42). பெண் போலீஸ் ஏட்டான இவர், திருச்சி கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரின் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இந்தநிலையில் பெண் போலீஸ் ஏட்டு ராஜாமணியின் தாயார் சுசிலாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், அவரை பார்க்க நேற்றுமுன்தினம் திருச்சி அருகே நவல்பட்டு வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்திருந்த ராஜாமணி, இரவில் அங்கேயே தங்கிவிட்டார்.

10 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு

நேற்று முன்தினம் இரவு ராஜாமணியுடன், அவருடைய தாயார் சுசிலா, தம்பி ராஜா, அவரது மனைவி யசோதா, தங்கை ராதிகா ஆகியோர் தூங்கியுள்ளனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டின் தாழ்ப்பாளை உடைத்து மர்ம ஆசாமி ஒருவர் உள்ளே நுழைந்துள்ளார். 

அவர், அங்கு தூங்கிக்கொண்டிருந்த ராஜாமணியின் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துச்சென்றுவிட்டார். இதுகுறித்து நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் ராஜாமணி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண் போலீஸ் ஏட்டின் தாலிச்சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story