திருச்சி வக்கீல் கொலையில் பெண் உள்பட 10 பேருக்கு வலைவீச்சு


திருச்சி வக்கீல் கொலையில் பெண் உள்பட 10 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 11 May 2021 4:06 AM IST (Updated: 11 May 2021 4:06 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி வக்கீல் கொலையில் கண்காணிப்பு கேமரா பதிவின் அடிப்படையில் பெண் உள்பட 10 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருச்சி வக்கீல் கொலையில் பெண் உள்பட 10 பேருக்கு வலைவீச்சு
கண்காணிப்பு கேமரா பதிவின் அடிப்படையில் போலீசார் விசாரணை
திருச்சி, 
திருச்சி வக்கீல் கொலையில் கண்காணிப்பு கேமரா பதிவின் அடிப்படையில் பெண் உள்பட 10 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வக்கீல் கொலை

திருச்சி பீமநகர் வடக்கு எடத்தெருவை சேர்ந்தவர் வக்கீல் கோபி கண்ணன் (வயது 35). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே தனது 5 வயது மகளுக்கு சைக்கிள் ஓட்ட கற்று கொடுத்துக்கொண்டிருந்தார். 
அப்போது மர்ம நபர்களால் கோபி கண்ணன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். நடுரோட்டில், மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பழிக்குப்பழி

உடனடியாக ஏராளமானவர்கள் அங்கு கூடினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக செஷன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில், கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு அரியமங்கலம் பகுதியை சேர்ந்த ஹேமந்த் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வக்கீல் கோபி கண்ணன் பெயரும் இடம் பெற்றிருந்தது தெரியவந்தது. 

மேலும் அந்த கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில் கூலிப்படையினர் துணையுடன் வக்கீல் வெட்டிக்கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. 
மேலும் கொலை நடந்த இடத்தின் அருகில் உள்ள பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

10 பேருக்கு வலைவீச்சு

இதில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் வக்கீலை வெட்டிய காட்சிகள் கொடூரமாக உள்ளன. அந்த பதிவின் அடிப்படையில் கூலிப்படையை சேர்ந்த கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் 2½ ஆண்டுகளுக்கு முன்பு கொலையானவரின் மனைவி மற்றும் அவரது 2 மகன்கள் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கண்டன தீர்மானம்

வக்கீல் கோபி கண்ணன் கொலை செய்யப்பட்டதற்கு திருச்சி மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மே 10, 11, 12 ஆகிய 3 நாட்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராக கூடாது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதன்படி நேற்று அந்த சங்கத்தினர் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

Next Story