காணாமல் போன வழக்கில் திடீர் திருப்பம்: திருச்சி நகைக்கடை ஊழியர் கொலை; 1½ கிலோ நகை கொள்ளை
திருச்சி நகைக்கடை ஊழியர் காணாமல் போன வழக்கில் திடீர் திருப்பமாக, அவர் கொலை செய்யப்பட்டு 1½ கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டிரைவர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி,
திருச்சி நகைக்கடை ஊழியர் காணாமல் போன வழக்கில் திடீர் திருப்பமாக, அவர் கொலை செய்யப்பட்டு 1½ கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டிரைவர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
நகைக்கடை ஊழியர்
திருச்சி புத்தூர் மதுரைவீரன் சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மார்ட்டின் ஜெயராஜ் (வயது 42). இவர் திருச்சி கரூர் பை-பாஸ் ரோட்டில் உள்ள பிரபல நகைக்கடையில் கொள்முதல் பிரிவில் கடந்த 6 வருடங்களாக வேலை செய்து வந்தார்.
இந்த நகைக்கடைக்கு தேவையான புதிய நகைகளை சென்னை உள்ளிட்ட வெளியிடங்களில் இருந்து வாங்குவதற்கு இவர்தான் செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மார்ட்டின் ஜெயராஜ் நகைகள் வாங்குவதற்காக சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு வாடகை காரில் புறப்பட்டு சென்றார்.
1½ கிலோ நகை
அந்த காரை திருச்சி மாம்பழச்சாலை தாத்தாச்சாரியார் கார்டனை சேர்ந்த சண்முகம் மகன் பிரசாந்த் (26) என்பவர் ஓட்டினார். மார்ட்டின் ஜெயராஜ் சென்னையை அடைந்ததும், திருச்சி நகைக்கடையின் உரிமையாளர் மதன் (41), அந்த கடைக்கு ஆன்-லைன் மூலம் ரூ.75 லட்சம் செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து மார்ட்டின் ஜெயராஜ் சென்னை நகைக்கடையில் இருந்து 1 கிலோ 598 கிராம் நகைகளை பெற்றுக்கொண்டு காரில் திருச்சிக்கு புறப்பட்டார். அத்துடன் தான் நகை கொண்டு வருவது பற்றி கடையின் உரிமையாளருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
மாயமானதாக புகார்
அதன் பின்னர் அவரிடம் இருந்து வேறு எந்த தகவலும் வரவில்லை. அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் மதன், 1½ கிலோ நகையுடன் தனது ஊழியர் மாயமாகி விட்டதாக உறையூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மார்ட்டின் ஜெயராஜை தேடிவந்தனர்.
ஊழியர் குத்திக்கொலை
மேலும் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் மணிராஜ் தலைமையில் இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், மார்ட்டின் ஜெயராஜ் சென்ற வாடகை காரின் டிரைவர் பிரசாந்தை சந்தேகத்தின் பேரில் அழைத்து விசாரணை நடத்தினார்கள்.
அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல் அளிக்கவே, அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், மார்ட்டின் ஜெயராஜை கத்தியால் குத்திக்கொலை செய்து, அவரிடம் இருந்த 1½ கிலோ நகையை தனது கூட்டாளிகளுடன் கொள்ளையடித்துவிட்டு அவருடைய உடலை காட்டுப்பகுதியில் புதைத்தது தெரியவந்தது.
சதித்திட்டம்
மேலும் விசாரணையில், டிரைவர் பிரசாந்த் குறிப்பிட்ட நகைக்கடைக்கு அடிக்கடி கார் ஓட்டிச்சென்றுள்ளார். இப்படி சென்ற போதெல்லாம் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளை மார்ட்டின் ஜெயராஜ் வாங்கி வருவது இவரது கண்ணை உறுத்தியது. அந்த நகைகளை கொள்ளை அடித்தால் நாம் வசதியாக வாழலாம் என்று டிரைவர் பிரசாந்த் நினைத்தார்.ங
இந்த திட்டத்தை தனது நண்பர்களான திருச்சியை அடுத்த கீழக்குறிச்சியை சேர்ந்த மற்றொரு பிரசாந்த் (21), மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அழகிய மணவாளம் கிராமத்தை சேர்ந்த பிரவீன்ராஜ் (20), அரவிந்த் (21), அறிவழகன் (20), விக்ரம் (21), செல்வா என்ற செல்வகுமார் (19) ஆகியோரிடம் கூறியுள்ளார். உடனடியாக அவர்கள் இதற்கு சதித்திட்டம் தீட்டி உள்ளனர்.
காரில் பின் தொடர்ந்தனர்
அதன்படி மார்ட்டின் ஜெயராஜ் சென்னையில் நகைகளை கொள்முதல் செய்துவிட்டு திருச்சிக்கு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு பிரசாந்த் உள்பட 6 பேரும் மற்றொரு காரில் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே வந்தபோது டிரைவர் பிரசாந்த் திடீரென காரை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிப்பதற்காக இறங்கி சென்றார். அப்போது பின் தொடர்ந்து வந்த காரில் இருந்து இறங்கிய 6 பேரும் மார்ட்டின் ஜெயராஜை சுற்றிவளைத்தனர்.
கத்தியால் குத்திக்கொலை
நகை இருந்த பையை பறித்துக்கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் மார்ட்டின் ஜெயராஜ் அதை பறிக்கவிடாமல் இறுக்கி பிடித்துக்கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், அவரை கத்தியால் குத்தினர்.
இதில் மார்டின் ஜெயராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அவரது உடலை காரில் ஏற்றிக்கொண்டு வந்த 7 பேரும் அங்கிருந்து திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அழகியமணவாளம் கிராமத்துக்கு புறப்பட்டனர்.
குழி தோண்டி புதைப்பு
அங்கு காட்டுப்பகுதியில் மார்ட்டின் ஜெயராஜ் உடலை குழி தோண்டி புதைத்துள்ளனர். பின்னர் மார்ட்டின் ஜெயராஜ் வைத்திருந்த நகைகளை எடுத்துக்கொண்டு, எதுவும் தெரியாதது போல் அங்கிருந்து வந்துள்ளனர். மேலும் கொள்ளையடித்த நகைகளை டிரைவர் பிரசாந்த் திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு பெண்ணிடம் கொடுத்து வைத்திருப்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் அம்பலமானது.
இதைத்தொடர்ந்து நகைக்கடை ஊழியர் மாயமான வழக்கை கொலை வழக்காக மாற்றி கார் டிரைவர் பிரசாந்த்தை நேற்று கைது செய்தனர். பின்னர், அவர் கொடுத்த தகவலின் பேரில், அவரது நண்பர்களான மற்றொரு பிரசாந்த், பிரவீன்ராஜ், அரவிந்த், அறிவழகன், விக்ரம், செல்வா என்ற செல்வகுமார் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
இன்று உடல் தோண்டி எடுப்பு
பின்னர், கைதான 7 பேரையும் நேற்று மாலை அழகியமணவாளம் கிராமத்துக்கு தனிப்படை போலீசார் அழைத்து சென்றனர். அங்கு மார்ட்டின் ஜெயராஜ் புதைக்கப்பட்ட இடத்தை அவர்கள் அடையாளம் காட்டினார்கள்.
ஆனால், கொரோனா பணி பளு காரணமாக, பிரேத பரிசோதனை செய்யும் டாக்டரால் நேற்று சம்பவ இடத்துக்கு வரமுடியவில்லை.
இதனால், மார்ட்டின் ஜெயராஜின் உடல் நேற்று தோண்டி எடுக்கப்படவில்லை. இன்று (செவ்வாய்க்கிழமை) தாசில்தார் முன்னிலையில் மார்ட்டின் ஜெயராஜின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்படும் என தெரிகிறது. மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.
Related Tags :
Next Story