நீலகிரியில் ரூ.8½ கோடிக்கு மது விற்பனை


நீலகிரியில் ரூ.8½ கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 11 May 2021 1:20 AM GMT (Updated: 11 May 2021 1:21 AM GMT)

கடந்த 8, 9-ந் தேதிகளில் நீலகிரியில் ரூ.8½ கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.

ஊட்டி,

கடந்த 8, 9-ந் தேதிகளில் நீலகிரியில் ரூ.8½ கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.

புதிய கட்டுப்பாடுகள்

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், மஞ்சூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூரில் 76 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளை தொடர்ந்து சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டது.

இதற்கிடையில் கேரள மாநில எல்லையை ஒட்டி எருமாடு, தாளூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்க கூட்டம் அதிகரித்தது. இதனால் தடுப்பு நடவடிக்கையாக 4 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. 

மதுப்பிரியர்கள் கூட்டம்

இந்த நிலையில் நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது. மேலும் முழு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை. இதையொட்டி கடந்த 8-ந் தேதி மற்றும் 9-ந் தேதி ஆகிய 2 நாட்கள் மட்டும் டாஸ்மாக் கடைகள் முழு நேரமும் இயங்கியது. 

முழு ஊரடங்கு அறிவிப்பை தொடர்ந்து ஊட்டியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்க மதுபிரியர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் விற்பனை சூடுபிடித்தது.

அதிக விற்பனை

இதுகுறித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சேகர் கூறியதாவது:- 
கொரோனா பரவலை தடுக்க டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. நீலகிரியில் கடந்த 8-ந் தேதி ரூ.3 கோடியே 56 லட்சத்து 85 ஆயிரத்து 600, 9-ந் தேதி ரூ.5 கோடியே 2 லட்சத்து 29 ஆயிரத்து 310-க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. 2

 நாட்களில் ரூ.8 கோடியே 59 லட்சத்து 14 ஆயிரத்து 910-க்கு மதுபானங்கள் விற்பனையானது. வழக்கமாக ஒரு நாளில் ரூ.1.70 கோடி முதல் ரூ.2 கோடி வரை விற்பனை நடைபெறும். முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால், அதற்கு முந்தைய 2 நாட்கள் அதிகமாக விற்பனை ஆகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

முழு ஊரடங்கையொட்டி நேற்று முதல் நீலகிரியில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story