தினமும் கடைகளுக்கு செல்லாமல் ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்து கொள்ளவும் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்
தினமும் கடைகளுக்கு செல்லாமல் ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்துக்கொண்டு வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. இந்த முகாமை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 2.75 லட்சம் பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தினமும் 8 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் வசதி உள்ளது. ஆனால், தடுப்பூசி வருவதை பொறுத்து நாள் ஒன்றுக்கு 2,500 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.நோய் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட தாம்பரம், பல்லாவரம், மேடவாக்கம் பகுதிகளில் தடுப்பூசி போடுவதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறோம். பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் முகாம் அமைத்து தடுப்பூசி போட்டு வருகிறோம்.
மொத்தமாக வாங்கி...
தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. இந்த முழு ஊரடங்கு காலத்தை முழுமையாக பயன்படுத்தினால் கொரோனா தொற்று சங்கிலியை முறித்து, பாதிப்பு குறைய வாய்ப்புகள் ஏற்படும்.
எனவே பொதுமக்கள் தினமும் மளிகை கடைகளுக்கு செல்லாமல் ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்துக்கொண்டு வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஊரடங்கில் பொதுமக்கள் அதிகம் வெளியே செல்லாமல் கொரோனா தொற்றை குறைக்க உதவவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story