தொழிற்சாலையில் மீண்டும் பணி வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்
திருவள்ளூர் அருகே தொழிற்சாலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட அதிகத்தூர் கிராமத்தில் தனியார் கார் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இங்கு மேல்நல்லாத்தூர், கீழ்நல்லாத்தூர், நுங்கம்பாக்கம், வெங்கத்தூர், வெங்கத்தூர் கண்டிகை, அதிகத்தூர், பட்டரை போன்ற பகுதிகளிலிருந்து திரளானவர்கள் இந்த தனியார் நிறுவனத்திற்கு இடம் கொடுத்து இருந்தனர்.
இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது பங்கை வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்று விட்டது. தற்போது புதியதாக வந்த நிர்வாகத்தினர் ஏற்கனவே அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்காமல் அவர்களை பணியிலிருந்து நீக்கினர். இதனால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட அந்த தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி அந்த தொழிற்சாலையை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம், தர்ணா போராட்டம் என தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். ஆனால் இதுநாள் வரையிலும் அவர்களுக்கு தீர்வு காணவில்லை. இது சம்பந்தமாக அரசு அதிகாரிகள் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தொழிலாளர்களுக்கு பணி வழங்க அந்த நிர்வாகத்தினர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
போராட்டம்
இதைத்தொடர்ந்து தனியார் நிறுவனம் அமைய இடம் கொடுத்த தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி நேற்று திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் சரவணன், விவசாய சங்க தலைவர் ஆறுமுகம், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணை தலைவர் சீனிவாசன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் இஸ்மாயில் உள்ளிட்ட நிர்வாகிகள் மீண்டும் தங்களுக்கு பணி வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் இது சம்பந்தமான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் பா. பொன்னையாவிடம் அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அவர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதன் காரணமாக நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story