பழவேற்காட்டில் கிடப்பில் போடப்பட்ட ரூ.2½ கோடியில் சுற்றுலா மையம், பயணிகள் தங்கும் விடுதி அமைக்கும் பணி; சுற்றுலாத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை


பழவேற்காட்டில் கிடப்பில் போடப்பட்ட ரூ.2½ கோடியில் சுற்றுலா மையம், பயணிகள் தங்கும் விடுதி அமைக்கும் பணி; சுற்றுலாத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 11 May 2021 4:37 PM IST (Updated: 11 May 2021 4:37 PM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் வந்து செல்வதால் கிடப்பில் போடப்பட்ட ரூ.2½ கோடியில் சுற்றுலா தகவல் மையம் மற்றும் தங்கும் விடுதி பணிகளை தொடங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழவேற்காடு தீவு

பொன்னேரி அடுத்த பழவேற்காடு தீவை சுற்றி 15 ஆயிரத்து 367 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இரண்டாவது மிகப் பெரிய உவர்ப்பு நீர் ஏரி இயற்கையாகவே அமைந்துள்ளது. இந்த ஏரியில் நீர் கலந்து முகத்துவாரத்தில் வழியாக வங்கக் கடலில் இணைகிறது.இந்த ஏரிக்கரையின் இருபுறங்களிலும் தமிழக, ஆந்திராவிற்குட்பட்ட 75 மீனவ கிராமங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். பழவேற்காடு தீவுப்பகுதி முற்கால, பிற்கால சோழர்கள், சேரர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள், விஜயநகரப் பேரரசுகள் ஆகியோரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாகும்.

இலங்கை, பர்மா, மலேசியா உட்பட பல்வேறு நாடுகளும் வாணிப தொடர்பு கடல்வழியாக ஏற்படுத்தி தங்கம், முத்து, பவளம், வைரம், வாசனைப் பொருட்கள், ஆடைகள் மீன் வகைகள் உட்பட பலவற்றை ஏற்றுமதி செய்து வந்தனர். போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர்கள் ஆங்கிலேயர்கள் என அயல்நாட்டினர் வணிகத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டனர். பழவேற்காடு பகுதி ஆங்கிலேயர் வசமானது பின்பு இந்தியாவிலேயே முதன் முதலில் இங்கு தான் காவல் நிலையம் அமைக்கப்பட்டது.

சுற்றுலா பயணிகள் கோரிக்கை

இங்கு அழகிய நீண்ட கடற்கரை, ஆங்கிலேயரின் குடியிருப்பு பகுதிகள், டச்சுகல்லறை இயற்கையாகவே அமைந்துள்ள பறவைகள் சரணாலயம், அலையாத்திக்காடுகள் உட்பட பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க இடமாக உள்ளது. இதனை தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் சுற்றுலாத் துறையின் மூலம் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி மற்றும் சுற்றுலா தகவல் மையம் அமைக்க கடப்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய ஆண்டார்மடம் என்ற இடத்தில் 358 ஏக்கர் அரசு நிலத்தில் ரூ.2 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் இன்றளவும் சுற்றுலா சார்பில் அங்கு எந்த விதமான பணிகளையும் துவக்காமல் திட்டம் பல ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

பழவேற்காட்டிற்கு அதிகளவில் சுற்றுலா பயணிகளின் வரும் நிலையில், சுற்றுலா விடுதியும் சுற்றுலா தகவல் மையம் ஏற்படுத்தி சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு வசதி அளிக்க மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.


Next Story