ரத்தினகிரியில் வங்கி சேவை நடக்காததால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்


ரத்தினகிரியில் வங்கி சேவை நடக்காததால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 11 May 2021 6:57 PM IST (Updated: 11 May 2021 6:57 PM IST)
t-max-icont-min-icon

ரத்தினகிரியில் வங்கி சேவை நடக்காததால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்

ராணிப்பேட்டை

தமிழக அரசு மாநிலம் முழுவதும் கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்துவதற்காக 24-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் வங்கி பணிகள் பாதிப்படையாத வகையில், 50 சதவீத ஊழியர்களுடன் வங்கிகள் செயல்படலாம் என அறிவித்திருந்தது.

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நேற்று காலை வாடிக்கையாளர்கள் வந்தனர். அவர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரிசையில் நின்றிருந்தனர். ஆனால் வங்கி நிர்வாகம் வாடிக்கையாளர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. 

வெகுநேரமாகியும் அனுமதிக்காததால் எதற்காக எங்களை அனுமதிக்கவில்லை என வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு வங்கி நிர்வாகம், கொரோனா தொற்றால் எங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது? என கூறினர். இதனால் வாடிக்கையாளர்களுக்கும், வங்கி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாடிக்கையாளர்களும் சமூக இடைவெளியை மறந்து வங்கி முன்பு கூட்டம் கூடினர். இறுதி வரை வங்கியின் உள்ளே யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் வெறுப்படைந்த வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராக அங்கிருந்து ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

அப்போது அவர்கள், ஊரடங்கு சமயத்தில் சில கட்டுப்பாடுகளுடன் வங்கி சேவைக்கு அனுமதி அளித்தும், வங்கியின் உள்ளே யாரையும் அனுமதிக்காமல் இருப்பது தங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் வாடிக்கையாளர்களின் எந்த பணிகளையும் செய்யாமல், உள்ளே இருந்து கொண்டே அலட்சியமான பதில்களை தெரிவிக்கின்றனர் என வங்கி நிர்வாகத்தின் மீது குற்றம்சாட்டினர்.

Next Story