கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கிய 643 மதுபாட்டில்கள் பறிமுதல் 2பேர் கைது
கோவில்பட்டியில் வீட்டில் புதுக்கி வைக்கப்பட்டு இருந்த 643 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 643 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய முன்னாள் கவுன்சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.
டாஸ்மாக் கடைகளுக்கு தடை
தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில், அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுபான பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி விற்பனை செய்யப்படுகிறதா?என்பது குறித்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், கோவில்பட்டி வள்ளுவர் நகர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனை நடக்கிறது என துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக் கதிரவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
வீட்டில் சோதனை
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், மாதவராஜா மற்றும் தனிப்பிரிவு காவலர் அருண் விக்னேஷ், ஏட்டு ஜெயராஜ், செல்வ குமார் போலீசார் வள்ளுவர் 1-வது தெருவில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட்டனர்.
அப்போது அங்கிருந்த ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற இருவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
மதுபாட்டில்கள் பறிமுதல்
வீட்டை சோதனையிட்டபோது, அங்கு 643 மதுபான பாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மதுபான பாட்டில்கள் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த ராமர் (வயது 33), பெரியசாமி (48) என்பது தெரியவந்தது.
முன்னாள் கவுன்சிலருக்கு வலைவீச்சு
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி யோடிய முன்னாள் நகரசபை கவுன்சில் வெள்ளைதுரை என்பவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story