தூத்துக்குடி ரவுடி கொலையில் போலீஸ் ஏட்டு கைது


தூத்துக்குடி ரவுடி கொலையில் போலீஸ் ஏட்டு கைது
x
தினத்தந்தி 11 May 2021 7:52 PM IST (Updated: 11 May 2021 7:52 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ரவுடி கொலை வழக்கில் போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி ரவுடி கொலை வழக்கில் போலீஸ் ஏட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரது மாமா கொலைக்கு பழிக்குப்பழியாக ரவுடியை தீர்த்துக்கட்டியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
குத்திக்கொலை
தூத்துக்குடி பாத்திமாநகர் 6-வது தெருவை சேர்ந்தவர் லூர்து ஜெயசீலன் (வயது 47). இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளாக தூத்துக்குடியில் டீக்கடை நடத்தி வந்தார். கடந்த 9-ந் தேதி இரவு இவர் தூத்துக்குடி மீளவிட்டான் ரெயில் நிலையம் செல்லும் ரோட்டில் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பரபரப்பு தகவல்
விசாரணையில், லூர்து ஜெயசீலனை, தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ரவுடி மோகன்ராஜ் (32) என்பவர் மதுகுடிக்க அழைத்து சென்று காட்டுப்பகுதியில் வைத்து நண்பருடன் சேர்ந்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிப்காட் போலீசார் மோகன்ராஜை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
தொடர்ந்து மோகன்ராஜிடம் போலீசார் நடத்திய கிடுக்கிபிடி விசாரணையில், பரபரப்பு தகவல்கள் வெளியானது.
அதாவது, கொலை செய்யப்பட்ட லூர்து ஜெயசீலன் கடந்த 6.8.1998 அன்று மற்றொரு ரவுடி கும்பலைச் சேர்ந்த அழகு என்பவரை வெட்டிக் கொலை செய்து உள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பழிக்குப்பழியாக...
கொலை செய்யப்பட்ட அழகு, தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ் ஏட்டு பொன்மாரியப்பனின் தாய்மாமா ஆவார். இதனால் ஏட்டு பொன்மாரியப்பன், தனது மாமா கொலைக்கு பழிக்குப்பழியாக லூர்து ஜெயசீலனை கொலை செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டி உள்ளார். இதனால் மோகன்ராஜை அழைத்து கொலை சதி திட்டத்தை அரங்கேற்றி உள்ளார்.
அதன்படி மோகன்ராஜ், பொன்மாரியப்பன் ஆகியோர் சேர்ந்து லூர்து ஜெயசீலனை மது குடிக்க அழைத்து சென்று கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.
போலீஸ் ஏட்டு கைது
இதையடுத்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான தனிப்படையினர், ஏட்டு பொன்மாரியப்பனை நேற்று அதிரடியாக கைது செய்தனர். குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.

Next Story