குற்ற சம்பவங்களை தடுக்க 12 இருசக்கர ரோந்து வாகனங்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க 12 இருசக்கர ரோந்து வாகனங்கள் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீசார் பணியில் இருப்பார்கள்.
விழுப்புரம், மே.12-
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும்போது உடனே சம்பவ இடத்திற்கு செல்லவும், வழிப்பறி, சங்கிலி பறிப்பு போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் தடுக்கும் பொருட்டும் நகர்ப்புறங்களில் ரோந்துப்பணி மேற்கொள்ள மாவட்ட காவல்துறைக்கு, காவல்துறை தலைமை அலுவலகத்தினால் 12 இருசக்கர ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களில் சைரன், ஒளிரும் விளக்கு, ஒலிப்பெருக்கி ஆகியவை பொறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரோந்து வாகனத்திற்கு தலா 6 போலீசார் ரோந்துப்பணிக்கு நியமிக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து சுழற்சி முறையில் பணியில் இருந்து தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எவ்வித சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வண்ணமும், எந்தவித குற்ற சம்பவங்கள் நிகழாத வண்ணமும் விழிப்புடன் பணியில் இருப்பார்கள்.
டி.ஐ.ஜி. தொடங்கி வைத்தார்
இந்த வாகனங்களில் விழுப்புரம் நகர போலீஸ் நிலையம், தாலுகா போலீஸ் நிலையங்களுக்கு தலா 2 வாகனங்களும், மேற்கு போலீஸ் நிலையத்திற்கு ஒரு வாகனமும், திண்டிவனம், ரோஷணை போலீஸ் நிலையத்திற்கு தலா ஒரு வாகனமும், செஞ்சி போலீஸ் நிலையத்திற்கு 2 வாகனங்களும், கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு ஒரு வாகனமும், ஆரோவில் போலீஸ் நிலையத்திற்கு 2 வாகனமும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த ரோந்து வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் இருந்து விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. எம்.பாண்டியன், கொடியசைத்து தொடங்கி வைத்து அந்த வாகனங்களில் பணியில் செல்லக்கூடிய போலீசாருக்கு வாக்கி-டாக்கி, தலைக்கவசம் ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாலமுருகன், நடராஜன், நல்லசிவம், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரேவதி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சேதுராமன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
குற்ற சம்பவங்களை தடுக்க
முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், இந்த ரோந்து வாகனங்களில் ஒவ்வொரு வாகனத்திலும் 6 போலீசார் பணியில் இருப்பார்கள். இவர்கள் சுழற்சி முறையில் (3 ஷிப்டுகளாக) பணியில் ஈடுபடுவார்கள். இவர்களின் தலையாய பணி, குற்றம் ஏதேனும் நடந்தால் உடனே சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து அப்பகுதியில் அமைதியை கொண்டு வர முதல்முயற்சியை மேற்கொள்வார்கள். அதுபோல் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 24 மணி நேரமும் ரோந்து பணி மேற்கொள்வது ஆகும்.
தற்போது கொரோனா முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோடு அவர்களை எச்சரிக்கை செய்யும் வகையிலும் இந்த ரோந்து வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஆகவே, பொதுமக்கள் விதிகளை மீறினால் அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். இதுவரை மாவட்டம் முழுவதும் 27 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.55 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
Related Tags :
Next Story