தேனி அரசு மருத்துவமனையில் ஒரேநாளில் 16 பேர் சாவு
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் உள்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி:
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் உள்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரேநாளில் 16 பேர் பலி
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றுக்கு பலி எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. அதேபோல் கொரோனா அறிகுறி மற்றும் இணை நோய் பாதிப்புடன் சிகிச்சைக்கு வருபவர்கள் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாராயணத்தேவன்பட்டியை சேர்ந்த போலீஸ்காரரின் 60 வயது தாய், கம்பத்தை சேர்ந்த 54 வயது ஆண், உத்தமபாளையத்தை சேர்ந்த 57 வயது ஆண், ஆண்டிப்பட்டியை சேர்ந்த 70 வயது முதியவர், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த 54 வயது ஆண், மதுரையை சேர்ந்த 79 வயது முதியவர் ஆகிய 6 பேர் நேற்று உயிரிழந்தனர்.
இதேபோல், கொரோனா அறிகுறி மற்றும் இணை நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 10 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அவர்களில் சிலர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள். சிலர், கொரோனா பரிசோதனை செய்யாத நிலையில், மூச்சுத் திணறல் பாதிப்பு மற்றும் மாரடைப்பு, சிறுநீரக கோளாறு போன்ற பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்றவர்கள் என மருத்துவத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இருப்பினும் ஒரே நாளில் 16 பேர் பலியான சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
படுக்கைகள் பற்றாக்குறை
இது ஒருபுறம் இருக்க தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சுமார் 340 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இருப்பினும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், கடும் பாதிப்புடன் வருபவர்களும் படுக்கையின்றி கொரோனா வார்டுக்கு வெளியேயும், மருத்துவமனைக்கு வெளியேயும் நீண்டநேரம் காத்திருக்கும் சூழல் உருவாகி உள்ளது.
இதற்கிடையே மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 417 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 591 ஆக உயர்ந்தது. மேலும் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 310 பேர் குணமடைந்தனர். இதுவரை இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து 21 ஆயிரத்து 503 பேர் மீண்டுள்ளனர். தற்போது கொரோனாவு பாதிப்புடன் 2 ஆயிரத்து 844 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Related Tags :
Next Story