சென்னையில் 3 அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலைகள் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் அறிவிப்பு


சென்னையில் 3 அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலைகள்  என்.எல்.சி. இந்தியா நிறுவனம் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 May 2021 10:42 PM IST (Updated: 11 May 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் உள்ள 3 அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலைகள் அமைக்கப்படும் என்று என்.எல்.சி. இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

நெய்வேலி, 


நாட்டில் கொரோனா பெருந்தொற்று உக்கிரமாக இருந்து வருகிறது. தற்போது தொற்று பரவல் ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இதனால் தினந்தோறும் பலர் உயிரிழந்து வருகிறார்கள்.

 இதையடுத்து ஆக்சிஜன் உற்பத்தியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதே வேளையில் தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையும் அதிகரிக்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தனது மின் திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழகம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில், சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலைகளை அமைக்க மத்திய நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத் ஜோ‌ஷி வழிகாட்டுதலின்படி திட்டமிட்டுள்ளது.

அதன்படி மணிக்கு சுமார் 30 ஆயிரம் லிட்டர் மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்கும் 9 ஆலைகளை நிறுவவும், நிமிடத்துக்கு 10 லிட்டர் ஆக்சிஜன் செறிவூட்டி அனுப்பும் 500 கருவிகளை வாங்கவும் ஒப்பந்த புள்ளிகளை அறிவித்துள்ளது.

நெய்வேலி, சென்னை 

இவற்றில், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. மருத்துவமனையில் ஒவ்வொன்றும் தலா ரூ.25 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் மணிக்கு 12 ஆயிரம் லிட்டர் (12 நியூட்டன் கன மீட்டர்) அளவு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் 2 ஆலைகள் நிறுவப்பட உள்ளது. 

மேலும் சென்னையில் உள்ள 3 அரசு ஆஸ்பத்திரிகளில், ஒவ்வொன்றும் தலா ரூ.65 லட்சம் முதல் 70 லட்சம் ரூபாய் மதிப்பில் மணிக்கு 30 ஆயிரம் லிட்டர் (30 நியூட்டன் கனமீட்டர்) ஆக்சிஜன் தயாரிக்கும் 3 ஆலைகளும் நிறுவப்பட உள்ளது.


இதில், சென்னையில் தமிழக அரசு குறிப்பிட்டு சொல்லும் 3 அரசு ஆஸ்பத்திரிகளில் ேற்கண்ட ஆலைகள் நிறுவப்பட உள்ளன.
இதுதவிர என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் திட்டங்கள் நடைபெற்று வரும் ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களிலும் தலா 3 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்பட உள்ளது. 

இதற்கான நிதி ஆதாரங்கள், 2021-22-ம் ஆண்டில் சமூக பொறுப்புணர்வு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகையில் இருந்து வழங்கப்படும் என்று என்.எல்.சி. இந்தியா நிறுவன தலைவர் ராக்கே‌‌ஷ்குமார் கூறினார்.

தூத்துக்குடி 

இது தவிர, 500 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள் வாங்குவதற்கான ஒப்பந்த அறிக்கையையும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. நிமிடத்திற்கு 10 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் இக்கருவிகளை வழங்குவதற்கான நிறுவனம் இந்த வாரத்திற்குள் தேர்வு செய்யப்பட உள்ளது.

இந்த கருவிகள் தமிழகத்தில் தூத்துக்குடி, நெய்வேலி பகுதிக்கும் இது தவிர ஒடிசா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தேவை அடிப்படையில் வழங்கப்படும்.

கொரோனா தொற்றால் ஏற்பட்டு இருக்கும் அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்ள, மருத்துவமனை செயல்பாடுகளை நேரடியாக கண்காணித்து வரும் என்.எல்.சி. தலைவர் ராக்கே‌‌ஷ்குமார், இதற்காக மனிதவள துறையின் தலைமை பொது சத்தியமூர்த்தியை சிறப்பு அதிகாரியாக நியமித்துள்ளார்.

ஒருவாரத்தில் அமைக்கப்பட்ட மருத்துவமனை 

தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நெய்வேலி என்.எல்.சி. மருத்துவமனையில் இதுவரை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக இருந்து வந்த 90 படுக்கைவசதி என்பது, தற்போது 500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 200 படுக்கைகள் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளன.

 மீதமுள்ளவை விடுதிகள், கல்லூரி மற்றும் விருந்தினர் இல்லத்தில் தயாராக உள்ளன.
மேலும் உத்திரபிரதேச மாநிலம் கதாம்பூரில் செயல்படுத்திவரும் அனல்மின் நிலைய வளாகத்தில் அந்த நிலையத்தை அமைத்துவரும் ஒப்பந்த நிறுவனங்களான எல்.அன்ட்.டி., ஜெனரல் எலக்ட்ரிக்கல், பி.ஜி.ஆர். ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஒரு வார காலத்தில் 70 படுக்கைகள் உள்ள ஒரு மருத்துவமனையை அமைத்துள்ளது. மேலும் அதன் அருகே உள்ள கட்டிடங்களில் 200 படுக்கைகள் கொண்ட கோவிட் நோய் பராமரிப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கட்டுப்பாட்டு அறை 

நெய்வேலி மருத்துவமனையில் நவீன சி.டி. ஸ்கேன் கருவியை நிறுவுவதற்கான பணிகளை இந்நிறுவனம் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. அடுத்த ஒன்றரை மாதத்திற்குள் நிர்மாணிக்கப்படும் இந்த கருவியானது, நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் அல்லாது, அருகில் உள்ள கிராம மக்களுக்கும் பெரிய அளவில் பயன்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

என்.எல்.சி. இந்தியா மருத்துவமனையின் பொது கண்காணிப்பாளர்(பொறுப்பு) டாக்டர் சாந்தலட்சுமி, உறைவிட மருத்துவர் டாக்டர் தாரணிமவுலி மற்றும் இதர மருத்துவர்களை கொண்ட ஒரு குழுவினர், மருத்துவமனைக்குள் கட்டமைப்பு வசதிகளை வலிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். 

கொரோனா தொற்று தொடர்பான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் ஒரு கட்டுப்பாட்டு அறை, நெய்வேலி மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது.

 மேலும் தேவைப்படுபவர்களுக்கு அவர்கள் வீட்டில் இருந்தவாறே இணையதள வசதி மூலம் மருத்துவர்களை தொடர்பு கொள்வதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் ஊழியர்கள் மருத்துவமனைக்கு வராமல் காணொலி மூலம் மருத்துவர்களின் அறிவுரையை பெற வசதி ஏற்படுத்தப்படும்.

ஒருமாதத்தில் பயனுக்கு வரும் 

என்.எல்.சி.யின் இந்த அறிவிப்புக்கு தற்போது ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஆக்சிஜன் மையம் அமைக்க நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் அனைத்தும் முழுவீச்சில் தொடங்கப்படும்.

 இப்பணிகள் ஏறக்குறைய ஒருமாத காலத்துக்குள் நிறைவு பெறும் என்று நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தின் ஆக்சிஜன் தேவையை அளிப்பதில் என்.எல்.சி. முக்கிய பங்கு வகிக்கும். மேற்கண்ட தகவலை என்.எல்.சி. இந்தியா நிறுவன தலைவர் ராக்கே‌‌ஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.


Next Story