கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக ஆக்சிஜன் சேமிப்பு தொட்டி என்.எல்.சி. நிர்வாகத்திற்கு கலெக்டர் வேண்டுகோள்


கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக  ஆக்சிஜன் சேமிப்பு  தொட்டி  என்.எல்.சி. நிர்வாகத்திற்கு கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 11 May 2021 10:46 PM IST (Updated: 11 May 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் புதிதாக ஆக்சிஜன் சேமிப்பு தொட்டி ஏற்படுத்த உதவ வேண்டும் என்று என்.எல்.சி.க்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர், 


கொரோனா தடுப்பு பணிகளை மேலும் துரிதப்படுத்த ஏதுவாக கடலூர் மாவட்டத்திற்கு நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியை பெறுவது தொடர்பாக காணொலிக் காட்சி வாயிலான ஆய்வுக்கூட்டம் நடந்தது.

இதில் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தனது அலுவலகத்தில் இருந்து என்.எல்.சி. நிறுவன தலைவர் ராகேஷ்குமார், மனிதவள மேம்பாடு இயக்குனர் விக்ரமன், கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அதிகாரி, கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், சிதம்பரம் சப்-கலெக்டர் மதுபாலன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, மாவட்டத்தின் தற்போதைய கொரோனா சூழல் குறித்து அலுவலர்களுடன் கலெக்டர் விளக்கினார். தொடர்ந்து நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்திடம் மாவட்ட கலெக்டர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசியதாவது:-

ஆக்சிஜன் தொட்டி

கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் ஏற்கனவே 6 கிலோ லிட்டர் ஆக்சிஜன் தொட்டி செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 130 ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கூடுதலாக ஆக்சிஜன் தொட்டியில் இருந்து குழாய்கள் பதித்து ஆக்சிஜன் முனைகளை அதிகரித்து ஒரு வாரத்திற்குள் ஆக்சிஜ னுடன் கூடிய படுக்கை வசதிகளை 2 மடங்காக உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வரு கிறது.

இந்த சூழ்நிலையில் புதிதாக மற்றொரு 6 கிலோ லிட்டர் (6 ஆயிரம் லிட்டர்) ஆக்சிஜன் சேமிப்பு தொட்டியை கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் ஏற்படுத்த உதவ வேண்டும் என்றார்.

தயாரிப்பு ஆலை

அதற்கு நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் மூலம் சென்னையில் 3 இடங்களில் ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகளை நிறுவ முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு மாவட்ட கலெக்டர், இந்த 3-ல் ஏதேனும் ஒரு ஆக்சிஜன் தயாரிப்பு ஆலையை கடலூர் மாவட்டத்தில் நிறுவ வேண்டும் என்றார். இதை கேட்ட என்.எல்.சி. அதிகாரிகள், அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சிதம்பரம் சப்-கலெக்டர், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு மூலம் சிதம்பரத்தில் சுமார் ஆயிரம் லிட்டர் ஆக்சிஜனை ஒரு நிமிடத்தில் தயாரிக்கும் ஆலை ஒன்று நிறுவப்பட உள்ளதாகவும், அதற்கு தேவைப்படும் உயர்மின் அழுத்த மின்மாற்றியை நிறுவ சுமார் ரூ.1.33 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதை கேட்ட கலெக்டர், இதற்கான செலவு தொகை முழுவதும் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் ஏற்குமாறு கேட்டுக்கொண்டார்.

10 ஆம்புலன்ஸ்

சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பேசுகையில், கொரோனா நோயாளிகளை ஆஸ்பத்திரிகளில் இருந்து பராமரிப்பு மையங்களுக்கு அழைத்துச்செல்ல ஏதுவாக 10 ஆம்புலன்ஸ்களை என்.எல்.சி. நிறுவனம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது கடலூர் மாவட்டத்திற்கு 100 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கு வதாக மாவட்ட கலெக்டரிடம் என்.எல்.சி. நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

சுகாதாரத்துறை இணை இயக்குனர் பேசுகையில், சென்னையில் தற்போது செயல்பட்டு வருவது போல 10 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகளுடன் கூடிய ஒரு பேருந்து வசதி கடலூர் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் ஏற்படுத்தி தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

நிறைவேற்ற வேண்டும்

இறுதியாக பேசிய மாவட்ட கலெக்டர், மாவட்டத்தில் கொரோனா பரவலை மேலும் துரிதமாக கட்டுப்படுத்த மற்றும் கொரோனா பாதித்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை மேற்கொள்ள இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று என்.எல்.சி. நிர்வாகத்தை கேட்டுக்கொண்டார். இதில் என்.எல்.சி. அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story