தனியார் மருத்துவமனை ஊழியர் உள்பட 4 பேர் கைது
பெங்களூருவில் சட்டவிரோதமாக ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த தனியார் மருத்துவமனை ஊழியர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு:
மருத்துவமனை ஊழியர்
பெங்களூருவில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்தை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் கும்பலை போலீசார் கைது செய்து வருகிறார்கள். அந்த மருந்தை விற்கும் கும்பலை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் பசவேசுவராநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரெம்டெசிவிர் மருந்து விற்ற 2 பேரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் பெயர் சந்தோஷ், சுனில் என்று தெரிந்தது.
இவர்களில் சந்தோஷ் தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்கிறார். சுனில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆவார். இவா்கள் 2 பேரும் குறைந்த விலைக்கு ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி அவற்றை கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரிந்தது. அவர்களிடம் இருந்து 8 பாட்டில் ரெம்டெசிவிர் மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேர் மீதும் பசவேசுவராநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போலீசாருக்கு தகவல் தெரிவிக்க...
இதுபோல், பெங்களூரு எஸ்.ஜே. பார்க் போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் ரெம்டெசிவிர் மருந்தை விற்றதாக 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் பெயர்கள் பிரவீன் (வயது 42), ஸ்ரீநாத் (35) என்று தெரிந்தது. இவர்கள் 2 பேரும் தாசப்பா ஆஸ்பத்திரி அருகே ஒரு ரெம்டெசிவிர் மருந்தை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்தது தெரியவந்தது.
கைதானவர்களிடம் இருந்து 5 பாட்டில் மருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது எஸ்.ஜே.பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெங்களூருவில் சட்டவிரோதமாக ரெம்டெசிவிர் மருந்து மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் விற்பனை செய்யும் கும்பல் பற்றி தகவல் கிடைத்தால், அவர்களை பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும்படி மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனா் சந்தீப் பட்டீல் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
Related Tags :
Next Story